யாருக்காகவும் 'காத்திருக்க' வேண்டியதில்லை.. பெண் 'மருத்துவர்' கொலையில்.. 3 போலீசார் 'அதிரடி' சஸ்பெண்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 02, 2019 12:36 PM
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலையில் 3 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன் ஹைதராபாத் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி 4 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
குற்றவாளிகள் நால்வரும் தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குற்றவாளிகள் நால்வரையும் 14 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் பிரியங்கா பெற்றோர் மற்றும் சகோதரி நாங்கள் புகார் அளிக்கும்போதே போலீசார் எங்களை அலைக்கழிக்காமல் புகாரை ஏற்றிருந்தால் எனது அக்கா உயிருடன் மீட்கப்பட்டு இருப்பார் என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரியளவில் வெடித்து பிரச்சினையாக மாறியது. இதைத்தொடர்ந்து, மருத்துவரின் பெற்றோர் புகார் அளித்தும் அதன் மீது விரைந்து செயல்படாத ஷம்ஷாபாத் காவல்நிலைய சப் - இன்ஸ்பெக்டர் ரவி குமார், ஏர்போர்ட் (டோல்கேட்) காவல்நிலைய கான்ஸ்டபிள்கள் வேணுகோபால் மற்றும் சத்யநாராயணா ஆகிய மூவரும் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சைராபாத் போலீஸ் கமிஷனர், ''பெண் மருத்துவர் விவகாரத்தில், புகார் அளித்தும் விரைந்து செயல்படாத 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலதிகாரியின் உத்தரவு வரும்வரை அவர்களது சஸ்பெண்டு தொடரும். திருட்டு, கடத்தல், கொலை, தாக்குதல், பாலியல் வன்முறை போன்ற புகார்கள் வந்தால், உயரதிகாரியின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு சைபராபாத் பகுதியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என தெரிவித்துள்ளார்.
