‘2 நாட்களுக்கு முன்பே’.. போலீஸாரிடம் ‘சிக்கித் தப்பிய குற்றவாளிகள்’.. ‘மருத்துவர் பிரியங்கா கொலையில் அதிர்ச்சி பின்னணி’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 02, 2019 07:34 PM

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளைப் பற்றிய பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Hyderabad Priyanka Case Accused Was Caught 2 Days Before Crime

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா 3 நாட்களுக்கு முன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற முழக்கம் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான முகமது பாஷா என்கிற ஆரீஃப், கேசவலு, சிவா, மதன் ஆகிய 4 பேரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலீஸார் அவர்களிடம் நடத்தி வரும் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய குற்றவாளியான லாரி ஓட்டுநர் ஆரீஃப் கடந்த 2 ஆண்டுகளாக லைசென்ஸை புதுப்பிக்காமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். ஆனால் போலீஸாரிடம் சிக்காமலேயே இருந்துவந்த ஆரீஃப் பெண் மருத்துவர் பிரியங்கா கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்கள் முன்புதான் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். அப்போது அவர் போலீஸாரை ஏமாற்றித் தப்பியுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள போலீஸார், “24ஆம் தேதி கர்நாடகாவின் கங்காவதியில் இருந்து செங்கல் லோடை ஏற்றிக்கொண்டு ஆரீஃபும், சிவாவும் ஹைதராபாத் நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது மற்ற இருவரையும் அழைத்த ஆரீஃப் குடிகண்ட்லா கிராமத்துக்கு வரும்படி கூறியுள்ளார். அங்கிருந்து சட்டவிரோதமாக இரும்புக்கம்பிகளை ஹைதராபாத் கொண்டு செல்ல அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி 25ஆம் தேதி அதிகாலை லாரியில் லோடை ஏற்றிக்கொண்டு சென்றபோது போக்குவரத்து போலீஸார் அவர்களுடைய லாரியைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சோதனையின்போது ஆரீஃபிடம் லைசென்ஸ் இல்லாதது தெரியவந்ததும் போலீஸார் லாரியைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளனர். அப்போது ஆரீஃப் லாரியை நகர்த்த முடியாது, செல்ஃப் ஸ்டார்ட் இல்லை எனக் கூறி, செல்ஃப் ஸ்டார்ட் கேபிளையும் போலீஸாருக்கு தெரியாமல் பிடுங்கிவிட்டுள்ளார். இதனால் லாரியை எடுக்க முடியாமல் போக, போலீஸார் மற்றொருவரை விசாரிக்கச் சென்றதும் ஆரீஃப் அங்கிருந்து லாரியுடன் தப்பியுள்ளார்.

பின்னர் அந்த இரும்புக் கம்பிகளை விற்றுவிட்டு 26ஆம் தேதி ஷம்ஷாபாத்தை அடைந்த அவர்கள் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். மறுநாள் காலை அப்பகுதி போலீஸார் லாரியை எடுக்கச் சொன்னதைத் தொடர்ந்து அவர்கள் நால்வரும் தொண்டுபள்ளி டோல்கேட்டுக்குச் சென்று அங்கு லாரியை நிறுத்தியுள்ளனர். அங்குதான் அவர்கள் மருத்துவர் பிரியங்காவிடம் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : #TELANGANA #HYDERABAD #PRIYANKAREDDY #DOCTOR #ACCUSED #POLICE