‘கொஞ்சநேரம் பேசிட்டேயிரு’! ‘எனக்கு பயமா இருக்கு’! ‘5 நிமிடத்தில் போன் ஸ்விட்ச் ஆஃப்’.. கடைசியாக தங்கையிடம் பேசிய ஆடியோ பதிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Nov 30, 2019 08:07 PM
ஹைதராபாத் பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்படுவதற்குமுன் தனது தங்கையிடம் போனில் பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்தவர் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி. இவர் கடந்த 27ம் தேதி வேலை முடிந்து இரவு வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை அடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பெண் மருத்துவர் தனது தங்கையிடம் இறுதியாக போனில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘இன்று நீ கம்பெனிக்கு சென்றுவிட்டாயா?’ என மருத்துவர் பேசத்தொடங்கியுள்ளார். அதற்கு தங்கை ‘ஆம்’ என பதிலளித்துள்ளார். தொடர்ந்து பேசிய மருத்துவர், ‘கொஞ்சம் நேரம் என்னுடன் பேசிக்கொண்டே இரு, என்ன பிரச்சனை என்பதை பிறகு சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளார். ‘ஏதேனும் விபத்தில் சிக்கியுள்ளாயா?’ என தங்கை கேட்டுள்ளார்.
அதற்கு, ‘நான் ஏற்கனவே சொன்னதுபோல் சுங்கசாவடியில் என் வண்டியை நிறுத்த அவர்கள் அனுமதிக்கவில்லை. அதனால் சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ள சாலையில் நிறுத்தினேன். ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது வண்டி பஞ்சராகி இருந்தது’ என மருத்துவர் கூற, ‘வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு வேறு வாகனத்தில் வந்துவிடு’ என தங்கை கூறியுள்ளார். அதற்கு ‘வண்டியை இங்கே நிறுத்தினால் காலையில் யார் வந்து எடுப்பது?’ என மருத்துவர் தெரிவிக்க, ‘மெக்கானிக்கிடம் சொல்லி எடுத்து வர சொல்லலாம். எந்த டயர் பஞ்சராகி உள்ளது?’ என தங்கை கேட்டுள்ளார். மருத்துவர் பின் டயர் எனக் கூற, என்ன நடந்தது என்று தெளிவாக கூறு என மீண்டும் தங்கை கேட்டுள்ளார்.
நடந்த சம்பவங்களை மருத்துவர் தங்கையிடம் விவரித்துள்ளார். அதில், ‘இங்கே ஒரு லாரி நிற்கிறது. அதில் சிலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் வந்து என் வண்டியை சரி செய்வதாக சொல்லி எடுத்து சென்றார்’ என மருத்துவர் கூற, ‘திருப்பி வண்டியை தரவில்லையா?’ என தங்கை கேட்டுள்ளார். அதற்கு, ‘கொண்டு வந்தான், ஆனால் கடைகள் எல்லாம் பூட்டி இருப்பதாக கூறிவிட்டு மீண்டும் எடுத்து சென்றுவிட்டான். எனக்கு பயமா இருக்கு’ என மருத்துவர் பதிலளித்துள்ளார்.
அவரின் தங்கை, ‘அருகில் உள்ள சுங்கச்சாவடியில் மக்கள் கூட்டமாக உள்ள பகுதியில் நின்றுகொள். அவர் வண்டியை கொடுத்ததும் வீட்டுக்கு வந்துவிடு’ என ஆலோசனை கூறியுள்ளார். ஆனால், ‘அங்கே நிறைய பேர் இருப்பார்கள். அனைவரும் என்னையே பார்த்துக் கொண்டிப்பார்கள். எனக்கு பயமாக இருக்கும். கொஞ்சநேரம் நீ என்னுடன் பேசிக்கொண்டிரு, அதற்கு அவர் வந்துவிடுவார்’ என மருத்துவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய மருத்துவர், ‘இங்கே இருப்பவர்கள் பேய் போல என்னை உத்து பார்த்துகொண்டே இருக்கின்றனர். முதலில் நான் அவர்களிடம் உதவி கேட்கவே இல்லை. அவர்களாகவே வந்து உங்களது வண்டி பஞ்சராகி இருப்பதாக சொன்னார்கள். அதற்கு, அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் சரிசெய்து கொள்கிறேன் என சொன்னேன். ஆனால் அவர்கள், மேடம் வண்டி பாதிவழியிலேயே நின்றுவிட்டால் சிரமமாகிவிடும், எங்களிடம் கொடுங்கள் சரிசெய்து தருகிறோம் என கூறினர். நான் வேண்டாம் என சொன்னபோதும் பின்தொடர்ந்து வந்தனர். என்னால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை. வண்டியுடன் சென்றவன் இன்னும் வரவில்லை. எனக்கு பயமாக உள்ளது’ என மருத்துவர் அழத்தொடங்கியுள்ளார்.
உடனே தங்கை, ‘அருகில் இருக்கும் சுங்கச்சாவடிக்கு செல். இந்த நேரத்தில் எதற்காக நீ சென்றாய், சீக்கிரமாக வீட்டுக்கு வரவேண்டாமா? என கேட்க, ‘நாளை எங்களது மருத்துவமனையில் ஆய்வு நடக்க இருக்கிறது. அந்த வேலை விஷயாமாக செல்ல வேண்டி இருந்தது’ என அழுதவாறே பதிலளித்துள்ளார். அதற்கு தங்கை, ‘பயப்படாதே, தைரியமாக இரு எதும் நடக்காது. சுங்கச்சாவடியில் சென்று இரு, நான் ஒரு ஐந்து நிமிடம் கழித்து போன் செய்கிறேன்’ என கட் செய்துள்ளார். ஆனால் அடுத்து 5 நிமிடம் கழித்து போன் செய்தபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த மருத்துவரின் தங்கை, ‘என் அக்கா எனக்கு போன் பண்ணியபோது, இரவு லேட்டாகிவிட்டதால் பயந்துள்ளார் என நினைத்தேன். ஆனால் அடுத்து சில நிமிடத்தில் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது. நெட்வொர்க் பிரச்சனை என நினைத்தேன். ஆனால் இப்படி நடக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அங்கு இருந்தவர்களை அவள் நம்பினாள், அதனை பலமாக எடுத்துக்கொண்டு இப்படி செய்துவிட்டனர். எனது அக்கா அனுபவித்த அந்த வேதனையை குற்றவாளிகளும் அனுபவிக்க வேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் 100-க்கு போன் செய்ய மறந்துவிட்டால். எனக்கும் அது தோன்றவில்லை. இனிமேலாவது பெண்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்’ என கண் கலங்க தெரிவித்துள்ளார்.
