'வண்டிய நிறுத்துங்க!'.. 'அரண்டு போகும் வாகன ஓட்டிகள்'.. 'வியப்பில் ஆழ்த்தும் போலீஸார்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 25, 2019 06:21 PM
அரியலூர் மாவட்டத்தில் மட்டும் அரசு மற்றும் தனியார் என 9 சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன.
சிமெண்ட் தயாரிக்கத் தேவைப்படும் சுண்ணாம்புக் கற்கள் இம்மாவட்டத்தில் கிடைப்பதே இதற்குக் காரணம். தவிர இந்த உற்பத்திகளுக்குத் தேவையான நிலக்கரிகள் வெளியில் இருந்து லாரிகளில் இறக்குமதி செய்யப்படுவதும், அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர்நிகழ்வு.
இதன் காரணமாகவே இப்பகுதியில் பகல், இரவு என பாராமல் எப்போதும் லாரிகளின் அணிவகுப்பைக் காண முடியும்.இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதால், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையிலான காவலர்கள் அரியலூர்-தஞ்சாவூர் மற்றும் மீன்சுருட்டி, தா.பழூர் சாலைகளில் போகும் கனரக வாகன ஓட்டிகளை மறிக்கின்றனர்.
இதனால் அந்த வாகன ஓட்டிகள் முதலில் பயப்படுகின்றனர். ஆனால் போலீஸார் அவர்களை மறிப்பதோ, முகத்தைக் கழுவிக்கொள்ளுங்கள், டீ குடியுங்கள், விழிப்பாக லாரிகளை இயக்கி, விபத்துக்குள்ளாகாமல், விபத்தை உண்டாக்காமல் பாதுகாப்பான பயணத்தை உங்களுக்கும் அடுத்த வாகனத்துக்கும் கொடுங்கள் என்ற விழிப்புணர்வை உண்டாக்கத்தான். போலீஸாரின் இந்த வகையான முயற்சி பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.