'உங்க ATM கார்டை புதுப்பிக்கணும்.. OTP நம்பரை சொல்லுங்கே!'.. 'போலீஸ்காரரையே ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் அபேஸ்!'.. பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 18, 2019 06:22 PM
வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி ‘உங்களது ஏடிஎம் லாக் ஆயிடுச்சு.. ஏடிஎம்ல இருக்குற 16 இலக்க எண்ணைக் கொடுங்க, பின் நம்பர் கொடுங்க சரி பண்ணிடலாம்’ என்று வடமாநிலத்தவர் குரலில் பேசி பணத்தை அபகரிக்கும் மோசடிகளிடம் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று போலீஸார் பல வகையிலும் எச்சரித்துள்ளனர்.
அண்மையில்தான் இப்படியான போன் கால்களை, கால் செண்டரில் இருந்து அழைத்து பேசும் 32 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் இதுபற்றிய விழிப்புணர்வு உண்டாக்கி வரப்படும் நிலையில், ராமநாதபுரத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் மோசடி கும்பலிடம் இவ்வாறு பணத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கனரா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இவருக்கு அப்படி ஒரு மோசடி நபர் போன் செய்து, ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி, செல்போனுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணையும் அவர் கேட்டுள்ளார். அதை நம்பி ஓடிபி எண்ணை கிருஷ்ணமூர்த்தி கொடுத்ததை அடுத்து, அடுத்த சில நொடிகளிலேயே 99 ஆயிரத்து 968 ரூபாய், அதாவது சுமார் 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளார் அந்த மர்ம நபர்.
கிராமப்புறத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் பலரும் அரசு சார்ந்த உதவிகளையும், நிதிகளையும், பரிவர்த்தனைகளையும் பெற அவர்கள் பெரிதும் வங்கிகளையும் ஏடிஎம்களையும் நம்பியிருக்கிற சூழலில் அவர்களை பயன்படுத்திக்கொண்டு அவர்களிடம் போன் செய்து புரியாத வகையில் பேசி குழப்பி கொள்ளையடிக்கும் இதுபோன்ற கும்பலை பற்றிய விழிப்பை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியே அப்படி ஒரு கும்பலின் நூதன வலையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.