'திசை மாறிய கேமரா'...'அரை நிர்வாணத்தில் மர்ம மனிதன்'...'சென்னை' மக்களை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Nov 23, 2019 02:09 PM
சென்னையில் உள்ள சில குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராகளில் கத்தியுடன் மர்ம மனிதன் ஒருவனின் நடமாட்டம் பதிவாகியுள்ளது, சென்னை மக்களை பீதி அடைய செய்துள்ளது.
சென்னை போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராகள், காலையில் பார்க்கும் போது திசை மாறி இருந்தன. இதனை கவனித்த வீட்டு உரிமையாளர்கள் மீண்டும் அதை சரி செய்து வைத்தனர். ஆனால் மீண்டும் அடுத்தநாள் காலையில் கேமராகள் திசை மாறி இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. நள்ளிரவு நேரத்தில் கையில் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன், அரை நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன் ஒருவன் உள்ளே நுழைகிறான். முகத்தை முகமுடியால் மறைத்தபடி காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து உள்ளே வரும் அவன், டார்ச் லைட்டைக் கொண்டு வீட்டினுள் ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்கிறான். அதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா எங்கே இருக்கிறது என்பதை தேடும் அவன், தான் கொண்டு வந்த கட்டையைக் கொண்டு சிசிடிவி கேமராவை மேல் நோக்கி பார்க்கும்படி திருப்பி விடுகிறான்.
இரு கைகளிலும் கையுறை அணிந்துள்ள அவன், டார்ச் லைட் அடித்து வீட்டில் ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்கிறான். அவன் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நோட்டமிடுவதால், நிச்சயம் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் தான் வந்திருக்க வேண்டும் என அந்த குடியிருப்பை சேர்ந்த மக்கள் அச்சத்துடன் கூறியுள்ளார்கள். இதனிடையே இந்த காட்சிகள் தொடர்பான பதிவினை வளசரவாக்கம் காவல்துறையினரிடம் அந்த பகுதி மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்.
இதனிடையே இந்தப் பகுதி தாம்பரம் - மதுரவாயல் பைபாஸை ஒட்டி அமைந்துள்ளதால், வாகன நடமாட்டம் மட்டுமே அதிகமாக இருக்கும் நிலையில், ஆள் நடமாட்டம் என்பது குறைவு. எனவே இந்த பகுதிகளில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி நள்ளிரவில் குடியிருப்புகளுக்குள் நுழையும் கொள்ளையனைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் சென்னை மக்களை பீதி அடைய செய்துள்ளது.