'திடீரென திரும்பிய பைக்'... நிலைத்தடுமாறி கவிழ்ந்த லாரி... நொடியில் நடந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 27, 2019 01:01 PM
தேனி அருகே மினிசரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில், மாந்தோப்பு வேலைகள் நடைப்பெற்று வந்தது. இதற்காக, தேவதானப்பட்டி மஞ்சளாறு பகுதியைச் சேர்ந்த 11 கூலித் தொழிலாளர்களுடன், உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, மினி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் - தேனி நெடுஞ்சாலையில் உள்ள தர்மலிங்கபுரம் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று, திடீரென சாலையில் உள்ள வளைவில் திரும்பியதாகத் தெரிகிறது.
அப்போது இதனை சற்றும் எதிர்பாராத மினி சரக்கு லாரியின் ஓட்டுநர் செல்லப்பாண்டி, பைக் மீது மோதாமல் இருக்க உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். இதில் மினி சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியிலிருந்து தூக்கிவீசப்பட்டு, 3 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும்,மினி சரக்கு லாரி ஓட்டுநர் செல்லப்பா உள்பட 8 பேர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து, தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளளது.