துண்டு, துண்டாகக் கிடைத்த ‘உடல்’ பாகங்கள்... மாநிலத்தையே ‘உலுக்கிய’ பயங்கரம்... 3 ஆண்டுகளுக்குப் பின் ‘வளைத்து’ பிடித்த போலீசார்...
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவையே உலுக்கிய கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவருடைய சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கோழிக்கோடு நகரின் பல இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு நடந்த இந்த கொடூர கொலை கேரளாவையே உலுக்கியது. இந்நிலையில் இதில் தொடர்புடைய பிர்ஜு என்பவரை 3 ஆண்டுகள் கழித்து நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வைத்து கேரள போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இஸ்மாயில் என்பவரை மட்டுமில்லாமல், பிர்ஜு தன் தாயையும் கொலை செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “கோழிக்கோட்டை அடுத்த முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிர்ஜு. அவருடைய தந்தை 1984ஆம் ஆண்டே தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட, பிர்ஜு தன் தாய் ஜெயவல்லியுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து தந்தைக்கு இருந்த சொத்துக்கள் சிலவற்றை பிர்ஜு, அவருடைய சகோதரர், தாய் ஆகிய 3 பேரும் பகிர்ந்து எடுத்துக்கொண்டுள்ளனர். தன்னுடைய பங்கை விற்று ஆடம்பர செலவு செய்த பிர்ஜு, அது தீர்ந்துபோனதும் பணம் கேட்டு தாயைத் தொந்தரவு செய்யத் தொடங்கியுள்ளார்.
ஆனால் ஜெயவல்லி அவருக்கு பணம் தர மறுத்ததால், அவரைக் கொலை செய்ய முடிவு செய்த பிர்ஜு அதற்காக இஸ்மாயில் என்பவரைத் தொடர்பு கொண்டுள்ளார். பின் இஸ்மாயிலுடன் சேர்ந்து 2016ஆம் ஆண்டு தாயைக் கொலை பிர்ஜு அதை தற்கொலை போல மாற்றி நாடகமாடியுள்ளார். அதன்பிறகு தாயைக் கொல்ல கூலியாக இஸ்மாயிலுக்கு ரூ 10 லட்சம் கொடுப்பதாகக் கூறியிருந்த பிர்ஜு அதைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் பணத்தை கொடுக்காவிட்டால் உண்மையை வெளியில் கூறிவிடுவேன் எனக் கூறி அவரை மிரட்டியுள்ளார்.
பின்னர் பேசியபடி பணத்தைக் கொடுப்பதாகக் கூறி இஸ்மாயிலை வீட்டுக்கு வர வைத்த பிர்ஜு முதலில் அவருக்கு உணவும், மதுவும் கொடுத்துள்ளார். அதன்பிறகு பணம் கொடுப்பதில் இருந்து தப்பிப்பதற்காக தாயைக் கொலை செய்த அதே இடத்தில் வைத்து மதுபோதையில் இருந்த இஸ்மாயிலையும் அவர் கொலை செய்துள்ளார். இதையடுத்து அந்த கொலையில் இருந்து தப்பிக்க முடிவு செய்த பிர்ஜூ, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் பிளேடு மற்றும் பிளாஸ்டிக் பைகளை வாங்கி வந்து, இஸ்மாயிலின் உடலை துண்டு துண்டாக வெட்டி கோழிக்கோடு முழுவதும் வீசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து இருக்கும் சொத்துக்களை விற்றுவிட்டு பந்தலூர் அருகே வீடு ஒன்றை வாங்கிய பிர்ஜு , அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தலைமறைவாகி இருந்த பிர்ஜுவை நீண்ட நாட்களாக கண்காணித்து வந்து, தீவிர விசாரணைக்குப் பிறகே கைது செய்துள்ளோம். பிர்ஜு ஒரே வீட்டில் வைத்து 2 கொலைகளையும் செய்ததால் அங்கிருந்து நிறைய தடயங்களைக் கண்டுபிடித்துள்ளோம். மேலும் ஏற்கெனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இஸ்மாயிலின் கைரேகையை வைத்து, டிஎன்ஏ பரிசோதனை செய்தே கிடைத்த உடல் பாகங்கள் அவருடையது என்பதைக் கண்டறிந்தோம். விசாரணையில் பிர்ஜுவும் தான் செய்த குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்” எனக் கூறியுள்ளனர்.
