‘இன்குபேட்டரில் வைத்த குழந்தை’... ‘நொடியில்’... ‘தவறி விழுந்து நடந்த சோகம்’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Oct 31, 2019 12:00 PM

இன்குபேட்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட குழந்தை ஒன்று தவறி விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 months old premature daughter falling out of incubator

பிரேசில் நாட்டின் பெலம் நகரில், தனியார் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், ராபர்டா- ஜெசிகா என்ற இளம் தம்பதியினர், குறைமாதத்தில் பிறந்த 3 மாத பெண் குழந்தையை, உடல்நல குறைபாடு காரணமாக சேர்த்திருந்தனர்.  ராபர்டா மச்சாடா என்ற இந்த குழந்தை, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இன்குபேட்டரில் வைத்து செவிலியர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், குழந்தையை இன்குபேட்டரில்  வைத்துவிட்டு, செவிலியர் மற்றொரு கர்ப்பிணி தாயை கவனிக்க சென்றார். அப்போது குழந்தை காலை எட்டி உதைத்தது. இதில், இன்குபேட்டரின் சிறிய லாக் கழன்று, கதவு திறந்துகொண்டது. குழந்தை விழப்போவதைக் கண்ட செவிலியர் ஓடி வருவதற்குள், அடுத்த சில நொடிகளில் குப்புற கவிழ்ந்த குழந்தை, தரையில் விழுந்தது. இதனைக் கண்ட செவிலியர்கள் பதற்றத்துடன் குழந்தையை தூக்கி முதலுதவி அளித்தனர்.

எனினும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறிய மருத்துவர்கள், குழந்தையின் மண்டை ஓடு மற்றும் தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். மதியவேளையில் நடந்த இந்த சம்பவத்தின்போது, வெளியே மதிய உணவுக்காக சென்றிருந்த பெற்றோர், திரும்பி வந்து பார்த்தனர். அப்போது, செவிலியர்கள் பதற்றத்துடன் நடந்துகொண்டதை வைத்து, தங்களது குழந்தை கீழே விழுந்ததை அறிந்துக்கொண்டனர். குழ்ந்தை இருந்த இன்குபேட்டரின் இரண்டு கதவுகளில், ஒருப்பக்கம் மட்டுமே செவிலியர் லாக் பண்ணியதாக குழந்தையின் தந்தை குற்றஞ்சாட்டினார்.

இதனை மருத்துவமனை நிராகரித்ததை அடுத்து, பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ, நீதிமன்றத்தின் உத்தரவால், கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 8 மாத குழந்தையான ராபர்டா மச்சாடா, முதலில் மிகவும் கஷ்டப்பட்டாலும், கடவுளின் அருளால், சற்று உடல்நிலை முன்னேறி வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனினும், நஷ்ட ஈடு கேட்டு பெற்றோர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது.

Tags : #DAUGHTER #GIRL