‘கொள்ளையடித்ததை’ வைத்து சொந்தமாக ‘நகைக்கடை’... 16 ‘நாட்கள்’ 400 கி.மீ. ‘பயணம்’, 460 ‘சிசிடிவிக்கள்’ சோதனை... ‘முடிவில்’ வெளிவந்த ‘திடுக்கிடும்’ தகவல்கள்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jan 11, 2020 01:27 AM
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு கொள்ளையடித்த நகைகளை வைத்து நகைக்கடை நடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி திருநெல்வேலி விஎம் சத்திரத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 77 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த பெரிய கொள்ளை என்பதால் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவின் படி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. கொள்ளை நடந்த வீட்டை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் கைரேகை பதிவதைத் தவிர்த்திருந்ததை வைத்து அவர்கள் கைதேர்ந்தவர்கள் என முடிவுக்கு வந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் கொள்ளையர்கள் வேறு எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாததால், சம்பவத்தன்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகளை வைத்து சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற வாகனங்களின் எண்களை சேகரித்து அவை குறித்து விசாரித்த போலீசாருக்கு முக்கியமான க்ளூ ஒன்று கிடைத்துள்ளது. விசாரணையில் அந்த வழியாக சென்ற வாகனங்களில் ஒரு வாகனம் மட்டும் போலி எண்ணைக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் அந்தக் கார் சென்ற வழியில் இருந்த சோதனை சாவடிகள், ஹோட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் என 460 சிசிடிவிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இப்படி 16 நாட்கள் 400 கிலோமீட்டர் தூரம் பயணித்த அந்தக் காரை 460 சிசிடிவிக்களை ஆய்வு செய்து போலீசார் பின் தொடர்ந்துள்ளனர். மேலும் அந்தக் கார் ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் புதிய போலியான எண்ணுடன் பயணித்துள்ளது. அதையும் தாண்டி போலீசார் அந்த காரிலிருந்த ஒரு ஸ்டிக்கரை வைத்து அதை சரியாகப் பிடித்துள்ளனர்.
இப்படி 3 முறை நம்பர் பிளேட் மாற்றிய அந்தக் கார் திருப்பூருக்குள் நுழைந்ததும் காணாமல் போயுள்ளது. இதையடுத்து போலீசார் அங்குள்ள சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் கார் நிறுத்தப்பட்டு அதிலிருந்து 4 பேர் இறங்கியது தெரியவந்துள்ளது. அதில் தெரிந்த உருவத்தை வைத்து அவர்களில் ஒருவர் ஏற்கெனவே பல திருட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடந்து ராமஜெயம், குருவி சக்தி, முகமது ரபீக், யாசர் அராபத் என்ற அந்த 4 பேரை திருப்பூரில் மடக்கிப் பிடித்த திருநெல்வேலி போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் அவர்கள் 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும், கொள்ளையடிக்கும் நகைகளை சந்தேகம் வராமல் விற்க சொந்த ஊரில் மங்களம் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. அந்த நகைக்கடையில் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டுமென குலதெய்வத்தை வழிபட திருநெல்வேலி வந்தபோது, வந்த இடத்தில் ஒரு கொள்ளை அடிக்கலாம் என கைவரிசை காட்டியதில்தான் கடைசியாக அவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
