‘ஆசிட் கலந்த மதுபானம்’.. ‘திடீர் வயிற்று வலியால் துடித்த நண்பர்கள்’.. சரணடைந்தவரின் பரபரப்பு வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 10, 2020 03:35 PM

நாமக்கல் அருகே உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஆசிட் கலந்த மது கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Namkkal man drinks acid mixed alcohol dies, Two person arrested

நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் அருகே உள்ள இருக்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், தியாகராஜன், ஆறுமுகம் மற்றும் சரவணன். இவர்கள் நான்கு பேரும் கடந்த 30ம் தேதி ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதில் செந்தில்குமாரும், தியாகராஜனும் கடும் வயிற்று வலியால் துடித்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்களது உறவினர்கள் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் இருவரும் குடித்த மதுவில் ஆசிட் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உடன் மது அருந்திய சரவணனை கைது செய்தனர். மற்றொரு நபரான ஆறுமுகம் தலைமறைவாகினார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஆறுமுகம் காவல் நிலையத்தில் சரணைடந்தார். அப்போது அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதில், ஆறுமுகம் முன்னதாக இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்த முறை தனது மனைவி ராஜாமணியை துணைத் தலைவராக்க எண்ணியுள்ளார். அதனால் இருக்கூர் ஊராட்சி 2-வது வார்டில் அவரை நிறுத்தி போட்டியின்றி வெற்றி பெற வைத்துள்ளார். இதனை அடுத்து துணைத் தலைவராக தேர்வு செய்வதற்காக, இதே ஊராட்சியில் 6-வது வார்டில் வெற்றி பெற்ற செந்தில் குமாரின் மனைவி சத்யாவிடம் ஆதரவு கேட்டுள்ளார். ஆனால் அவர் ஆதரவு தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் செந்தில் குமாரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து செந்தில் குமாரை மது அருந்த அழைத்துள்ளார். அப்போது தனது நண்பர் தியாகராஜனை உடன் அழைத்துக்கொண்டு செந்தில் குமார் வந்துள்ளார். ஒன்றாக மது அருந்தும்போது செந்தில் குமாருக்கும், தியாகராஜனுக்கும் மதுவில் ஆசிட் கலந்து கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது.

Tags : #CRIME #MURDER #POLICE #ELECTIONS #NAMKKAL #LOCALBODYELECTION