'வாழ' விருப்பமில்லை... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 'அத்துமீறிய' டிஐஜியால்... 'விபரீத' முடிவெடுத்த சிறுமி?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 08, 2020 07:35 PM
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் டிஐஜி 17 வயது சிறுமியிடம் அத்துமீறியதால், அந்த சிறுமி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் நாள் தன்னுடைய 17-வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது சிறுமியின் குடும்பத்தாருடன் நட்புடன் இருந்த டிஐஜி நிஷிகாந்த் என்பவர் அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அழைப்பு இல்லாதபோதும் கலந்து கொண்டு, சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.
இது அங்குள்ள வீடியோவில் பதிவாகி உள்ளது. அதை டிஐஜியின் மனைவிக்கும் சிறுமியின் குடும்பத்தார் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இதுகுறித்து புகார் எதுவும் அளிக்கக்கூடாது என்று, டிஐஜி சிறுமியின் குடும்பத்தினரை நேரில் அழைத்து மிரட்டியுள்ளார். எனினும் சிறுமி வீட்டினர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
அதையடுத்து டிஐஜி மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது. போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 9-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 3.30 மணியளவில் வீட்டில் இருந்து சிறுமி மாயமாகி இருக்கிறார்.
வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், '' இந்த வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பமில்லை. என்னை மன்னித்து விடுங்கள். நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். இதற்கு அந்த டிஐஜி தான் காரணம்,'' என்று எழுதி வைத்திருந்திருக்கிறார். தற்போது போலீசார் சிறுமி மாயமானதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.