'ரயில்வே டிராக்கில் போதை மயக்கம்'...'அதிவேகத்தில் வந்த ரயில்'...'அரியர் எக்ஸாம்' எழுத வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Nov 14, 2019 11:24 AM
கோவை ராவுத்தர்பாலம் அருகே ரயில் மோதி 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராவுத்தர்பாலம் அருகே 4 உடல்கள் சிதறிய நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடதத்திற்கு விரைந்த காவல்துறையினர் நான்கு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் உயிரிழந்த இளைஞர்கள் சித்திக், கருப்பசாமி, கவுதம் உள்ளிட்ட நான்கு பேர் என்பதும் இவர்கள் கொடைக்கானல் மற்றும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
உயிரிழந்தவர்களில் 4 பேரும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் இறுதியாண்டு படித்து வந்த நிலையில், மேலும் 2 பேர் அரியர் தேர்வு எழுத வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், '' 4 பேரும் ரயில் வரும் பாதையில் அமர்ந்து மது அருந்தியிருக்க வேண்டும்.
அப்போது போதை மயக்கத்தில் இருந்ததால் ரயில் வந்ததை கவனிக்காமல் இருந்திருக்க வேண்டும். வேகமாக வந்த ரயில் மோதியதில் 4 பேரும் உடல் சிதறி உயிரிழந்திருக்கலாம்'' என காவல்துறையினர் கூறியுள்ளார்கள். இதனிடையே 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.