‘யோகாவில் சாதனை’... ‘பத்மஸ்ரீ விருது பெற்ற’... 'நானம்மாள் பாட்டி காலமானார்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 26, 2019 09:09 PM

யோகாவில் பல்வேறு சாதனைகள் புரிந்து பத்மஸ்ரீ விருது பெற்ற நானம்மாள் பாட்டி காலமானார். அவருக்கு வயது 99.

old woman yoga teacher padma shri award nanammal passed away

கோவை கணபதி அத்திபாளையத்தில் வசித்து வந்தவர், வயதான யோகா ஆசிரியரான நானம்மாள். இவர், கடந்த 1920-ம் ஆண்டு, பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில், வேளாண்மை குடும்பத்தில் பிறந்தவர். இவரின் குடும்பமே யோகாவை கற்றுத் தேர்ந்தவர்கள் என்பதால், எட்டு வயது முதலே இவரும் யோகாவை கற்று செய்து வந்தார். 90 ஆண்டுகளுக்கும் மேலாக யோகாவையே தனது மூச்சாக சுவாசித்துக் கொண்டிருந்தார், நானம்மாள்.

லட்சக்கணக்கான பேருக்கு, யோகாவை கற்றுத் தந்து, பல நூறுக்கும் மேற்பட்டவர்களை யோகா ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளார். இவரது பிள்ளைகளும், யோகா கற்று பயிற்சி மையம் நடத்தி வருகின்றனர். முதிய வயதிலும் யோகாவில் சாதித்து வந்த நானம்மாளுக்கு, கடந்த 2016-ம் ஆண்டில் மகளிரின் வலிமை என்னும் பொருள்படும் ‘நாரிசக்தி’ விருது மற்றும் 2017-ம் ஆண்டில் ’யோகா ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது.

‘யோகா பாட்டி’ என்ற பெயரில் வலம் வந்த நானம்மாளுக்கு, கடந்த 2018-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. கடந்த வாரம், கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நானம்மாள் காலமானார்.

Tags : #YOGA #NANAMMAL #COIMBATORE #PASSED #DEATH