'அடுத்த 3 நாட்கள்'... 'லேசான மழை மட்டுமே'... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 01, 2019 03:00 PM
அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில், லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ‘மஹா’ புயல் நிலைக்கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிரப் புயலாக மாறவுள்ளது. இந்தப் புயல் தற்போது, அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால், தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யும் என்றும், கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 3-ம் தேதி அந்தமான் பகுதியில், மேலடுக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 2 நாட்களுக்கு பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு திசையில் நகரும். இதனாலும் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
