‘ஆட்டோவில் ஏறிய இளம்பெண் டான்சருக்கு’... 'இளைஞர்களால் நேர்ந்த சோகம்'... 'சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 31, 2019 07:21 PM
சென்னையில் இரவில் ஆட்டோவில் தனியாக ஏறிய இளம்பெண்ணான நடனக் கலைஞர் ஒருவரை, கத்தியை காட்டி மிரட்டி, நகை, பணம் மற்றும் செல்ஃபோனை பறித்துசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் சிந்துஜா (27). நடன கலைஞரான இவர், கடந்த செவ்வாய்கிழமையன்று இரவு, புதுவண்ணாரப்பேட்டையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக, புச்சமாள் தெருவின் வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோவில் ஓட்டுநருடன், அவர் நண்பரும் உடன் இருந்துள்ளார். எண்ணூர் விரைவு சாலை கக்கன்ஜி நகர் ஜங்ஷன் அருகே ஆட்டோ வந்தபோது, திடீரென ஆட்டோவை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து, கத்தியை எடுத்து சிந்துஜாவிடம் நீட்டி மிரட்டி, நகைகளை கழட்ட சொல்லியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், கம்மல், மூக்குத்தி, வெள்ளிக்கொலுசு, செல்போன், பர்ஸில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் என அனைத்தையும் தந்துள்ளார். அவைகளை பறித்து கொண்ட 2 பேரும், அங்கேயே நிற்பதை பார்த்துதும், பயந்துபோன சிந்துஜா, ஆட்டோவில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதைப்பார்த்ததும், ஆட்டோவில் வந்த இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
அதன்பின்னர் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த சிந்துஜாவை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து சிந்துஜா, திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிரா உதவியுடன், ஆட்டோ ஓட்டுநர் கிஷோர், அவரது நண்பர் ஆசிப் பாஷா ஆகியோரை கைது செய்தனர்.