'பால்கனி இடிந்து விழுந்து’... ‘விளையாடிக் கொண்டிருந்த’... ‘சென்னை சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 17, 2020 09:48 PM

சென்னை கோடம்பாக்கம் புலியூர் ஹவுசிங் போர்டில் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 3 சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 children injured after collapsing residential balcony in power house

சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே சிவன் கோயில் தெற்கு தெருவில் புலியூர் ஹவுசிங் போர்டு உள்ளது. இங்கு மொத்தம் 428 வீடுகள் உள்ளன. அனைத்தும் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய குடியிருப்புகள் ஆகும். இந்நிலையில், இன்று மாலை E1 பிளாக்கில் வசிக்கும் சிறுவர்கள் கவிராயன் (9), பவித்ரன் (6), இவர்களின் பக்கத்து வீட்டு நண்பன் ஜீவா (13) ஆகிய மூவரும் ஒன்றாக 3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது பால்கனி சுவர் விரிசல் விட்ட நிலையில் திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதில் மூன்று மாடி பால்கனிகளும் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன. இதனால் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்த சிறுவர்கள் இடிபாடுகளுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். பால்கனி இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கமிருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளை அகற்றி சிறுவர்களை மீட்டனர்.

இதில் மூன்று சிறுவர்களும் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு சிறுவர்களுக்கும் உடம்பில் காயங்களும் ஒரு சிறுவனுக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.