சென்னையின் ‘முக்கிய’ மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. ரோட்டில் ஆறாய் ஓடிய ‘சமையல் எண்ணெய்’.. ‘ஊரடங்கு’ சமயத்திலயா இப்படி நடக்கணும்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 13, 2020 07:23 AM

சென்னை மேம்பாலத்தில் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

Chennai oil tanker lorry accident near Anna flyover

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்ல தடை இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னைக்கு சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மணலியில் இருந்து லாரி ஒன்று வந்துள்ளது. சென்னையின் முக்கிய மேம்பாலமான அண்ணா மேம்பாலத்தில் இருந்து டிஎம்எஸ் நோக்கி லாரி சென்றுகொண்டு இருந்துள்ளது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் முருகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் லாரியின் டேங் உடைந்ததில் அதனுள் இருந்த 24 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் முழுவதும் கீழே கொட்டியது. இதனால் சாலையில் எண்ணெய் ஓடி வெள்ளம் போல காட்சியளித்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பாலத்தில் இருந்து லாரியை அப்புறப்படுத்தினர். ஆனால் சாலை முழுவதும் எண்ணெய் ஓடியதால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடை செய்யப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் லாரி கவிழ்ந்து மக்களின் அத்தியாவசிய தேவையான சமையல் எண்ணெய் சாலையில் ஆறாய் ஓடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.