'75 வீடுகளுக்கும் வாடகை கேன்சல், அதுமட்டுமில்ல...' இது அடுத்த மாசமும் கண்டினியூ ஆச்சுன்னா... வீட்டு உரிமையாளரின் வெள்ளை மனம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் தனக்குச் சொந்தமான வீடுகளில் வசித்துவரும் 75 குடும்பத்தினருக்கும் ஏப்ரல் மாதத்திற்கான வாடகையை ரத்து செய்துள்ளார்.
இந்தியாவில் இரண்டாவது கட்டத்தில் இருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்தை மூன்றாவது நிலையான சமூக பரவல் ஆகாமல் இருக்க, மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இதற்காக, நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக பத்தொன்பது நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும்போது, வாடகை வீட்டில் இருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் வாடகையை வசூலிக்க கூடாது என்றும், வீட்டைக் காலி செய்ய சொல்லி தொந்தரவு பண்ணக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 41 வயதான கொடூரி பாலலிங்கம் தனது மூன்று குடியிருப்புகளில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கு வாடகையை ரத்து செய்துள்ளார்.அதாவது பாலநகரில் உள்ள பாலலிங்கத்துக்குச் சொந்தமான குடியிருப்புகளில் வசிக்கும் 75 குடும்பத்தினரும் ஏப்ரல் மாதம் வாடகை தர தேவையில்லை.
பாலலிங்கத்தின் குடியிருப்புகளில் உள்ளவை பெரும்பாலும் ஒரு படுக்கையறை கொண்டவை. அதில் பெரும்பாலும் பீகாரிலிருந்து பிழைப்புக்காக வந்தவர்கள்தான் வசிக்கிறார்கள். இப்போதே தனக்குக் கிடைக்கவேண்டிய 3.4 லட்சம் ரூபாய் வாடகையை ரத்து செய்துவிட்ட பாலலிங்கம், ஊரடங்கை நீடித்ததால் மே மாத வாடகையையும் ரத்து செய்ய எண்ணியிருப்பதாகச் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, ஆந்திராவிலும் தெலுங்கானாவில் உள்ள 250 ஏழைக் குடும்பங்களுக்கு 2.5 லட்சம் ரூபாயைப் பகிர்ந்து அளித்துள்ள இந்த வெள்ளை மனதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.