'வின்னிங் ஷாட் நேரத்தில்'... 'கடைசிப் பந்தில் ரன் அடித்திருக்க வேண்டும்'... வருந்தும் வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | May 15, 2019 06:06 PM
ஐ.பி.எல், தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், கடைசிப் பந்தில் ரன் அடிக்க முடியாமல் போனது குறித்து சென்னை அணி வீரர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி ஐ.பி.எல். கோப்பையை வென்றது. கடைசி இரண்டு பந்தில் 4 ரன்கள் அடிக்க வேண்டிய தருணத்தில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் களமிறங்கினார். தான் சந்தித்த முதல் பந்தில் 2 ரன்கள் அடித்தார். அதனால், கடைசிப் பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. ஆனால், மலிங்கா வீசிய அந்தப் பந்தினை ஷர்துல் அடிக்க தவறியதால், அது பேடில் பட்டு எல்.பி.டபிள்யூ ஆனார். சென்னை அணி பரிதாபமாக ஒரு ரன்னில் கோப்பையை நழுவவிட்டது.
இந்நிலையில், கடைசி நேரத்தில் ரன் அடிக்க முடியாமல் போனது குறித்து ஷர்துல் தாகூர் பேசியுள்ளார். 'பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் சென்றபோது, போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான், என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது. போட்டி நடந்த ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மிகப்பெரியது. பந்து எல்லைக் கோட்டுக்கு அருகில் சென்றால் இரண்டு ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஸ்டெம்பை குறிவைத்து மலிங்கா பந்து வீசிக் கொண்டிருந்தார். அவர் யார்க்கர் வீசும்போது அது கொஞ்சம் தவறினால் கூட. ஸ்கொயர் லெக் திசையில் அடித்துவிடலாம் என்று நினைத்தேன். அதேபோல், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தேன். எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த ஜடேன் பந்தினை தூக்கி அடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். கடைசி பந்தினை எல்லைக் கோட்டை நோக்கி அடித்துவிட்டு ரன் ஓட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன்.
பந்தினை தொட்டுவிட்டால் எப்படியும் எளிதில் ஒரு ரன் ஓடியிருக்கலாம் என நினைத்தேன். இடது காலினை நகர்த்தி பெரிய ஷாட் அடித்திருக்க வேண்டும். சிக்ஸர் அடிக்கும் திறமை எனக்கு உள்ளது. டென்ஷன் ஆன அந்தத் தருணத்தில் யாராவது ஒருவர் தோற்கத்தான் வேண்டும். யாரேனும் ஒருவர் வெற்றிபெற வேண்டும் எதிர்பாரதவிதமாக நாங்கள் தோற்க வேண்டியதாகிவிட்டது.
நான் இறங்கி வின்னிங் ஷாட் அடிக்க வேண்டிய நாள் வரும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. பந்து என்னுடைய பேடில் அடித்தபோது, நான் ரன் ஓட துவங்கினேன். நடுவரை கவனிக்கவே இல்லை. ஹீரோ ஆகியிருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிரிக்கெட் இத்தோடு முடிவதில்லை. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக பயன்படுத்திக் கொள்வேன்' என்று தாகூர் பேசியுள்ளார்.