12 மணிநேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்.. அசால்ட் காட்டிய லசித் மலிங்கா..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Apr 05, 2019 11:03 AM

12 மணிநேரத்தில் 2 நாடுகளில் கிரிக்கெட் விளையாடிய லசித் மலிங்கா 10 விக்கெட்டை வீழ்த்தி பிரமிக்க வைத்துள்ளார்.

malinga takes 10 wickets across 2 countries within 12 hours

ஐ.பி.எல். லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் புதன்கிழமை இரவு மோதின. இதில் மும்பை அணி வீரரான மலிங்கா, 4 ஓவர்கள் பந்து வீசி, சென்னை அணியின் முக்கிய வீரர்களான ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், மற்றும் பிராவோ ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.

இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில், இலங்கையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது கட்டாயம் என இலங்கை கிரிக்கெட் போர்டு அறிவித்திருந்தது. இதனால் ஐ.பி.எல். போட்டியில் மலிங்கா கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பி.சி.சி.ஐ. கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், சில ஐ.பி.எல். லீக் போட்டியில் பங்கேற்க மலிங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் போர்டு அனுமதி அளித்தது.


அதன்படி, புதன்கிழமை இரவு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற மலிங்கா, வியாழக்கிழமை காலை விமானம் மூலம் கண்டி சென்றார். அங்கு நடைபெற்ற 50 ஓவர் கொண்ட ஒருநாள் உள்ளூர் போட்டியில், கேலே அணிக்கு தலைமைத் தாங்கி மலிங்கா விளையாடினார். இதில் கண்டி அணிக்கு எதிராக  கேப்டன் மலிங்கா 9.5 ஓவர்கள் பந்து வீசி, 49 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன்மூலம் சுமார் 12 மணி நேரத்தில், 2 நாடுகளில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 10 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார் 35 வயதான மலிங்கா. கேலேவில் தனது அணி ஜெர்ஸியை அணிந்திருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொப்பியையே மலிங்கா அணிந்துள்ளார் என மும்பை இந்தியன்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

Tags : #MALINGA #MI #SRILANKA #INDIA #GALLE #LASITH #ONEFAMILY #CRICKETMERIJAAN