'அவரப்போல வரனும்'..பிறந்த குழந்தைக்கு அபிநந்தனின் பெயர் சூட்டி மகிழும் குடும்பங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 04, 2019 01:15 PM
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதில் தாக்குதல் நிகழ்த்தியது.

அதே சமயம் பாகிஸ்தானிற்கு மிக்-21 ரக போர் விமானத்தில் சென்ற இந்திய ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் இம்ரான்கானின் ஒப்புதலிக்கிணங்க நல்லெண்ண அடிப்படையில் இரு தினங்கள் கழித்து வாகா எல்லை வழியே அழைத்துவரப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து பாகிஸ்தானில் துணிச்சலாக பேசிய ராணுவ விமானி அபிநந்தனின் மீது பலரும் இன்ஸ்பிரேஷனாகினர். அவரைப் போலவே இளைஞர்கள் பலர் மீசை வைக்கவும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நிகல்பூர் மற்றும் சங்கனேர் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் புதிதாக 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு அபிநந்தனின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ளது நிகல்பூர். இப்பகுதியைச் சேர்ந்த 26 வயதானவர் விமலேஷ் பிந்த்ரா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரின் குழந்தைப் பேறுக்கான அறிகுறிகள் தென்பட்ட நாட்களில்தான் அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் போர் பற்றி எழுந்த விவாதங்களையும் செய்திகளையும் விமலேஷ் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் கடந்த வியாழக்கிழமை மாலை சிசேரியன் மூலம் விமலேஷுக்கு அழகானதொரு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அக்குழந்தைக்கு ராணுவ விமான வீரர் அபிநந்தனின் பெயரைச் சூட்டுவதென விமலேஷ் மற்றும் அவரது கணவர், குடும்பத்தினர் என அனைவரும் முடிவு செய்துள்ளனர். முன்னதாக அபிநந்தன் பற்றிய செய்திகள் வந்தபோதே, தனக்கு ஆண் குழந்தை பிறந்தால், அபிநந்தன் பெயரையே வைக்க வேண்டும் என்று தீர்க்கமாகக் கூறிவிட்டதாகக் கூறுகிறார் குழந்தையின் தாய் விமலேஷ்.
இதேபோன்று, அபிநந்தன் இந்தியாவிடன் ஒப்படைக்கப்பட்ட நாளான வெள்ளிக்கிழமை அன்று இரவு 9 மணி அளவில் சங்கனேரைச் சேர்ந்த நீலம் என்கிற பெண்ணுக்கு பிறந்த ஆண்குழந்தைக்கும் அக்குடும்பத்தினர் அபிநந்தன் என்று பெயர் வைத்து பெருமிதம் கொண்டுள்ளனர். மொத்தத்தில் இரண்டு குடும்பங்களுமே, தங்கள் குழந்தைகள் வளர்ந்த பின்பு அபிநந்தனைப் போல இந்த நாட்டுக்கு பெருமை தேடித்தந்து தங்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவிக்கின்றனர்.
