‘அபிநந்தன் பத்திரமா வரனும்’.. கோயில்களிலும் மதாலயங்களிலும் மக்கள் உருகி பிரார்த்தனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 01, 2019 01:30 PM
இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய பகுதியான புல்வாமாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியது. CRPF என்று சொல்லப்படுகிற இந்திய துணை நிலை ராணுவ அதிகாரிகள் வந்த பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 40 லிருந்து 44 பேர் வரை பலியாகினர்.

இதனையடுத்து பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் இந்திய படையால் தாக்கப்பட்டு தவிடுபொடியானதாக இந்திய ராணுவம் அறிவித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையில் அத்துமீறியதால், அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகவும் இந்தியா தெரிவித்தது.
பின்னர்பாகிஸ்தான் தனது அரசின் அதிகாரபூர்வமான ட்விட்டர் தளத்தில் இந்திய விமான ராணுவ வீரர் அபிநந்தன் தங்களிடம் பிடிபட்டதாகவும், ஆனால் அவரது விமானம் நொறுங்கியதாகவும் வீடியோ வெளியிட்டது. அதற்கு பிறகு அபிநந்தன் காபி குடித்தபடி தன்னுடைய பெயர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில விபரங்களை மட்டும் கூறுவதுபோலவும், நாட்டைப் பற்றிய மற்ற விபரங்களை தான் சொல்வதற்கில்லை என்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் கூறுவதுபோலவுமான வீடியோ வெளியானது. அதன் பின்னர் அபிநந்தன் பற்றிய அலை இந்தியா முழுவதும் பரவியது. தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் டெல்லியில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், அவரது தந்தையும் சென்னையில் வசித்து வரும் ராணுவ அதிகாரி என்றும் அறியப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த சூழலில் இன்று அபிநந்தனை ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வந்து பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அழைத்துவந்து ஒப்படைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் இந்திய தேசியக்கொடியுடன் வாகா எல்லையில் 'WelcomeHomeAbhi' என்கிற பதாகைகளை ஏந்தியபடி காத்திருக்க தொடங்கினர். நேற்றைய தினம் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் அறிவிப்பை இம்ரான் கான் சொன்னதுமே சென்னையில் அபிநந்தனின் உறவினர்களும், அவரது வீட்டினருகே இருந்த குடியிருப்பு வாசிகளும் இனிப்பு கொண்டாடினர்.
இந்த நிலையில் அவர் பத்திரமாக ஒப்படைக்கப்பட வேண்டும் என சென்னையில் காளிகாம்பாள் கோவில் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு கோவில் மற்றும் பிற மதாலயங்களில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
