687 பக்கங்களை நீக்கியது ஃபேஸ்புக்! தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Apr 01, 2019 07:56 PM

காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

facebook removes 687 pages links with congress

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நம்பகத்தன்மையற்ற வகையில் செயல்பட்டு வரும், 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் இந்தியாவை குறிவைத்து செயல்பட்ட ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது .

இந்தியாவின் மிக முக்கியமான கட்சியான காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவில், அங்கம் வகிப்பவர்களுடன் தொடர்புடைய 687 கணக்குகள், பக்கங்கள், குழுக்கள் ஆகியவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. ஒருங்கிணைந்த நெட்வொர்க் அடிப்படையில் இணைந்து செயலாற்றி தேவையற்ற தகவல்களைபரப்பியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு இது போன்ற நெட்வொர்க்காக செயல்பட்டு வந்த காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் இணைய பாதுகாப்பு கொள்கை பிரிவின் தலைவர் நதானியல் தெரிவித்தார். தங்களது சேவை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே இதனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதே காரணத்தினால் பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்துவருபவர்களின் நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் கணக்குகளையும் ஃபேஸ்புக் முடக்கியுள்ளது.  புல்வாமா தாக்குதலுக்குப் பிறகே இது அதிகரித்து இருப்பதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

Tags : #FACEBOOK #INDIA #CONGRESS #LOKSABHAELECTION2019 #PAKISTAN #SPAM