‘ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக தேர்வான கிரிக்கெட் பிரபலம்’?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Mar 03, 2019 11:39 AM
சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஏற்கனவே பதவியில் இருந்தவருமான அணில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுடனான முரண், அபினந்தன் விடுதலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டமானது துபாயில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மிக முக்கியமான பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக இந்தியா மீதான பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலால், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான முரண்பாடுகள் எழுந்தன. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவது தொடர்பான பலதரப்பட்ட கருத்துக்களும் எழுந்தன. பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவதில் இருக்கும் நன்மை, தீமைகளை பேசத் தொடங்கினர்.
ஆனால் இந்த கூட்டத்தில் அதைப்பற்றிய விவாதங்கள் எதுவும் எழுப்பப் படவில்லை என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமது பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக பாகிஸ்தான் மீது எழுந்த குற்றச் சாட்டுகளால் அந்நாட்டு கிரிக்கெட் அணியினரை ஐசிசி விளையாட்டுப் போட்டிகளில் அனுமதிப்பது தொடர்பான கேள்விகளோ , பேச்சுவார்த்தைகளோ எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய பார்வையாளர்களுக்கான பாதுகாப்புகள் குறித்த கேள்வியினை இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ராகுல் ஜோரி எழுப்பியதை அடுத்து, அவர் கேட்டுக்கொண்டபடியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து பரிசீலிக்கப்படவுள்ளதாக ஐசிசியின் முதன்மை அலுவலர் ரிச்சர்ட்சன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரரான அணில் கும்ப்ளே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இந்த பதவியில் 3 வருடங்கள் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டு இதே பதவிக்கு அணில் கும்ப்ளே தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.