‘நெஜமா பசங்க செம்மயா விளையாடிருக்காங்க’.. இந்தியாவின் தாக்குதலை புகழ்ந்த கிரிக்கெட் வீரர்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Siva Sankar | Feb 26, 2019 01:25 PM
பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மேல் அதிரடியாக தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களை இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

கடந்த வாரம் 14-ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் துணை நிலை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் சார்பாக தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளால் இந்திய துணை நிலை ராணுவ வீரர்களில் தமிழக வீரர்கள் 2 பேர் உடபட, சுமார் 40 வீரர்கள் பரிதாபமாக பலியாகியது இந்தியாவை மட்டுமல்லாது உலக நாடுகளையே அச்சுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவியதோடு கிரிக்கெட் உள்ளிட்ட பல விஷயங்களிலும் பாகிஸ்தானும் இந்தியாவும் இணையும் சாத்தியம் வெகுவாகக் குறைந்தது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து 12 மிராஜ் ஜெட் விமானங்கள் மூலம், எல்லையை தாண்டிச்சென்று பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர்கள் கொல்லப்பட்டதை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிடம் இருந்து
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வெளியுறவுத் துறை செயலாளர் கோகலே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது வீரர்களைப் பாராட்டுவதுபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் "The boys have played really well" என்று இந்திய ராணுவ வீரர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். முன்னதாக புல்வாமா தாக்குதலில் பலியான 40 துணை நிலை ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்குண்டான கல்விச் செலவையும் ஏற்று தனது சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைப்பதாக சேவாக் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
The boys have played really well. #SudharJaaoWarnaSudhaarDenge #airstrike
— Virender Sehwag (@virendersehwag) February 26, 2019
