பைக்கில் சென்ற மாணவர் மீது 'மோதி' ஏறி இறங்கிய கல்லூரி பேருந்து... நண்பர்களின் கண்முன்னே 'துடிதுடித்து' இறந்த மாணவர்... கதறியழுத மாணவ,மாணவிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 17, 2020 06:01 PM

தான் படிக்கும் கல்லூரி பேருந்து மோதி மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Student Death in College Bus Collision, Police Investigate

புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் பகுதியை சேர்ந்த சுதர்சனம் (21) அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் காய்கறி கடையொன்றில் சுதர்சனம் வேலை செய்து வந்தார்.

அதேபோல இன்று காலையில் காய்கறி கடையில் வேலை முடித்து, கல்லூரிக்கு கிளம்பும் பொருட்டு பைக்கில் சுதர்சனம் வீடு திரும்பினார். அப்போது அவரது கல்லூரியை சேர்ந்த பேருந்து ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்றுள்ளது. இதைப்பார்த்த சுதர்சனம் அவர்களுக்கு கைகாட்டியபடி உற்சாகத்துடன் பைக்கில் சென்றுள்ளார்.

திடீரென அந்த பேருந்து சுதர்சனத்தின் பைக்கை உரச இதில் சுதர்சனம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர்மீது பேருந்து பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சுதர்சனம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைக்கண்ட அவரது நண்பர்கள் கதறியழுதனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக சுதர்சனம் உறவினர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் இதற்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டுமே என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் கல்லூரி நிர்வாகம் இதற்கு தகுந்த பதிலை அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சுதர்சனம் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் போராட்டம் நடத்தினர்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் புகார் அளித்தால் முறையாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்க, இதையடுத்து அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.