"ஓவர் ஸ்பீடு கூட இல்ல..." "அதுக்கும் மேல..." "பயணிகள் எடுத்துக்கூறியும் கேட்கவில்லை..." உயிர் தப்பிய பயணியின் 'ஷாக்' ரிப்போர்ட்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 24, 2020 11:41 AM

ஓவர் ஸ்பீடையும் தாண்டிய வேகத்தில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநரால் தான் விபத்து நேரிட்டதாக, காயத்துடன் தப்பிய பெண் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோவில் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shock Report of the Woman Escaping the Accident

கேரளாவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பிப்ரவரி 21-ம் தேதி நடந்த விபத்து குறித்து கூறுகிறது. இந்த விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெங்களூரு - பெரிந்தல்மன்னா (Perintalmanna) இடையே கடந்த 21ம் தேதி இயக்கப்பட்ட பேருந்து ஒன்று நள்ளிரவு 1:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணித்த அம்ருதா என்ற பெண் கழுத்தில் பேண்டேஜ் அணிந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "மைசூர் அருகில் உள்ள ஹன்சூர் (hunsur) பகுதியில் இந்த விபத்து நடந்தது. ஹன்சூர் ஒரு சிறிய கிராமம்தான். கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நடந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை.  பெங்களூருவில் இருந்து 9.30 மணிக்கு பேருந்து புறப்பட்டது. பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வேகமெடுத்தது. ஓவர் ஸ்பீட் என்று கூட சொல்ல முடியாது. ஓவர் ஸ்பீடுக்கு கூட நாம் மனதில் ஒரு லிமிட் வைத்திருப்போம். அது அதையும் தாண்டிய வேகம். அது ஸ்லீப்பர் பேருந்து, எங்களால் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. நாங்கள் அனைவரும் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என உருண்டு கொண்டேதான் பயணிக்க முடிந்தது.

பேருந்தில் இருந்த சில பயணிகள் ஓட்டுநரிடம் சென்று பேசினர். பேருந்தில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி என நிறைய பேர் உள்ளனர். கொஞ்சம் வேகம் குறைவாக இயக்குங்கள் என கேட்டுக் கொண்டனர். இது நாங்கள் வழக்கமாக செல்லும் சாலைதான் என ஓட்டுநர் பதிலளித்தையடுத்து, அவர்கள் திரும்பிவிட்டனர். அதன்பின்னர் தான் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது. அப்போது பேருந்தில் பயணித்த சிலர் நல்ல உறக்கத்தில் இருந்தனர். விபத்து நடந்தபோது என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை.

தனியார் பேருந்து பர்மிட் இல்லாத சாலையில் பயணித்துள்ளது. சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வழி தெரியாமல் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார் ஓட்டுநர். பேலன்ஸ் இல்லாமல் பேருந்து ஒரு போஸ்டில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. பலர் இந்த விபத்தில் காயமடைந்திருந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அதன்பின்னர் அந்தப் பேருந்து நிர்வாகம் வேறொரு பேருந்தை எங்களுக்கு ஏற்பாடு செய்தனர். மீண்டும் அதே நிறுவனத்தின் பேருந்தில் ஏற எப்படி தைரியம் வரும்.

வேறு வழியில்லாமல் அந்தப் பேருந்தில் ஏறினோம்.இரண்டாவது பேருந்தும் வயநாடு சாலையில் சென்ற வேகம் இருக்கே! நாங்கள் உயிரோடு வீடு திரும்பியதே ஆச்சர்யமாக இருக்கிறது. ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளியே கூற வேண்டும் என்பதற்காகத்தான் பேசுகிறேன். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #AMRUTHA MENON #KERALA #MYSORE #PERINTALMANNA #BUS ACCIDENT