12 ஆண்டுகளுக்கு முன் 'தந்தை' கொலை... 'குற்றவாளி' குடும்பத்துக்கு 'இன்ப' அதிர்ச்சியளித்த மகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Feb 14, 2020 11:41 PM

தன்னுடைய தந்தையை கொலை செய்த குற்றவாளியின் குடும்பத்தினருக்கு, கேரளப்பெண் ஒருவர் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

Why Kerala Woman hand over land to Killer\'s Family?

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த நாய்சி என்ற பெண்ணின் தந்தை மேத்தீவ். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவந்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு திடீரென காணாமல் போனார். முதல்நாள் இரவு தன்னுடைய நண்பர் அனிஷுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அதற்கு அடுத்த நாள் அவர் காணாமல் போனார். எனினும் இந்த வழக்கில் துப்பு எதுவும் துலங்கடப்படாமல்  நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது. இதற்கிடையில் 2016-ம் ஆண்டு போலி கரன்சி வழக்கில் அனிஷ் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேத்தீவ் குறித்து கூறியுள்ளார்.

அவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேத்தீவைக் கொலை செய்து புதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேத்தீவ் காணாமல் போனதாக நினைத்திருந்த குடும்பத்தினருக்கு இந்தத் தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, அனிஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அனிஷ் தன்னுடைய வீடு மற்றும் நிலங்களை அடமானம் வைத்து மேத்தீவிடம் பணம் வாங்கியுள்ளார். பணம் கொடுக்கல் வாங்கலில் இந்தக் கொலை நடந்ததாக அனிஷ் கூறியுள்ளார்.

மேத்தீவின் மரணத்துக்கு பின் அவரது குடும்பம் நிலைகுலைந்தது. கடனுக்காக தங்களது நிலங்களை நாய்சி குடும்பத்தினர் விற்பனை செய்துள்ளனர். பெங்களூருவில் வேலை கிடைத்ததால் அதை வைத்து நாய்சி தன்னுடைய குடும்பத்தை பராமரித்து வருகிறார். இதற்கிடையில் அனிஷின் குடும்பத்தாருக்கு நாய்சி 5 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதுகுறித்து நாய்சி, ''தன்னுடைய மகன் ஜெயிலுக்கு போக நேரிடும் என்று தெரிந்தும், அனீஷின் தந்தை வாசு இந்த கொலை குறித்து போலீசுக்கு துப்பு கொடுத்தார். அனிஷின் குடும்பம் தற்போது மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறது. அதனால் தான் பல வருடங்கள் கழித்து அவரின் நிலத்தை திருப்பி அளித்தோம். அனிஷ் செய்த குற்றத்துக்காக அவரது குடும்பத்தினருக்குத் தண்டனை வழங்கக் கூடாது,''  என தெரிவித்து இருக்கிறார்.