‘காதலியுடன்’ காரில் ஏறிய இளைஞர்... திடீரென செய்த காரியத்தால் ‘உறைந்துபோய்’ நின்ற ஓட்டுநர்... ‘அடுத்து’ நடந்த பயங்கரம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Dec 13, 2019 12:46 PM
காதலி மற்றும் கார் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் பாடிபில்டர் ஹேமந்த் லம்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவில் சில நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும், டெல்லியில் தங்கி படித்துவந்ததும் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இல்லாததால், இதைக் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அப்போது அந்தப் பெண்ணின் உறவினர்கள் அளித்த தகவலின்படி, அவர் கடைசியாக காதலர் ஹேமந்த் லம்பா என்பவருடன் வெளியே சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஹேமந்தை தேடிவந்த போலீசார் விசாரணையத் தீவிரப்படுத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “சம்பவத்தன்று ஹேமந்த் லம்பா தன் காதலியுடன் ஓலா வாடகை காரில் பயணித்துள்ளார். அப்போது டெல்லியைச் சேர்ந்த தேவேந்திரா என்பவர்தான் காரை ஓட்டியுள்ளார். காரில் சென்றுகொண்டிருந்தபோது காதலியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஹேமந்த் திடீரென துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இதைப் பார்த்து கார் ஓட்டுநர் தேவேந்திரா அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இதையடுத்து பதற்றத்தில் என்ன செய்வதெனத் தெரியாத ஹேமந்த் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்தப் பெண்ணின் உடலை வீசிவிட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி காரை டெல்லி நோக்கி ஓட்டச் செய்துள்ளார். பின் கார் ஹரியானா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது தேவேந்திராவையும் சுட்டுக் கொலை செய்துவிட்டு ஹேமந்த் காருடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து தலைமறைவான ஹேமந்த் காரை விற்க முடிவு செய்து டீலர் ஒருவரை அணுகியுள்ளார். அப்போது அவருடைய நடவடிக்கையால் சந்தேகமடைந்த டீலர் காரில் இருந்த வாகனத்தின் உரிமையாளர் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அவரிடம் பேசிய தேவேந்திராவின் மனைவி தன் கணவர் கொலை செய்யப்பட்டது குறித்துக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கொடுத்த தகவலின்படி ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொலைகளில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.