‘நிமிஷத்துக்கு 5 கணக்கு போடணும்!’.. 10-ஆம் வகுப்பு மாணவர்களை சரமாரியத் தாக்கிய பள்ளி முதல்வர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் பத்தாம் வகுப்பு பயிலும் 2 மாணவர்களை சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவின் விசாகப்பட்டிணத்துக்கு உட்பட்ட அனகாப்பல்லி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களை மகர சங்கராந்தி சமயத்தில் வீட்டுப்பாடம் செய்யாததால் அப்பள்ளியின் முதல்வர் கோபமாக திட்டியுள்ளார். அதன் பின் பிரம்பால் அடிக்கத் தொடங்கிய பள்ளி முதல்வர் மாணவர்களிடம், 5 நிமிடத்துக்குள் ஒரு கணக்கு வீதம், 2 மணி நேரத்தில் 25 கணக்குகள் செய்து முடிக்க வேண்டும் என்று கூறி அறிவுறுத்துகிறார். அதன் பின் வலியுடன் மாணவர்கள் முட்டிப் போடுகின்றனர்.
வகுப்பறைக்கு வெளியில் நடந்த இந்த சம்பவத்தை அங்கிருந்த மாணவர் ஒருவர் வீடியோ எடுத்திருந்துள்ளார். இந்த வீடியோ வெளியானதை அடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விஷயம் போனது. இந்த சம்பவத்தை அடுத்து மாணவர்கள் மீது ஆசிரியர்கள் இதுபோன்ற வன்முறையான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப் பட்டது.
இதுபற்றி பேசிய பள்ளி முதல்வர், அந்த வீடியோவைப் பார்த்தபோது தனக்கும் வருத்தமாகவே இருந்ததாகவும், ஆனால் மாணவர்களின் கல்வி அறிவு மீதான எதிர்கால அக்கறையிலேயே அவ்வாறு அடித்து அவர்களை ஒழுங்குக்கு கொண்டுவந்ததாகவும், அவர்களின் பெற்றோர்களும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், பிள்ளைகளை நல்வழிப்படுத்த நினைக்கும் அவர்களும், மாணவர்களை தண்டிப்பதை ஆதரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அனகாப்பல்லி போலீஸார் பிரிவு 324 மற்றும் 75ன் கீழ் பள்ளி முதல்வர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
