'மைக்ரோபயாலஜி!'... 'சிவில் இன்ஜினியரிங்!'... துப்புரவு பணி செய்யும் இளம் பட்டதாரிகள்!... அரசு வேலை பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 10, 2020 08:38 PM

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் பட்டதாரிகள், வேலை நேரம் குறைவு என்பதாலும் சம்பளம் அதிகம் கிடைப்பதாலும் பணியை சிறப்பாக செய்வதாக தெரிவித்தனர்.

graduates about corporation sweeping job in coimbatore

கோவையை குனியமுத்தூரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 23). மைக்ரோ பயாலஜி பட்டதாரி. இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர் பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் நேற்று முதல் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.

அரசு வேலையில் சேர வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. தற்போது அது நிறைவேறி உள்ளது. அரசு வேலை என்பதால் நான் இந்த பணியில் சேர்ந்தேன். எனக்கு முதன் முதலாக ராஜவீதியில் ரோட்டை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது.

இந்த பணி ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. ரோட்டில் செல்பவர்கள் அனைவரும் என்னையே பார்த்து சென்றனர். நான் அதனை சமாளித்து விட்டேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இந்த பணியில் இருந்து இன்னும் மேலே உள்ள பணிகளுக்கு வர முயற்சி எடுப்பேன்.

நான் பள்ளியில் படிக்கும்போது நாட்டு நலப்பணி திட்டத்தில் இருந்தேன். அப்போது குப்பைகள் எடுக்கும் பணியை செய்துள்ளேன். தற்போது அதுவே எனக்கு வேலையாக கிடைத்துள்ளது. இந்த வேலையில் நான் சிறப்பாக பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் பத்மாவதி (35). என்ற பெண் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். தற்போது அந்த வேலையை விட்டு விட்டு மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக சேர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ராஜவீதியை சுத்தப்படுத்துவது என்பது சந்தோ‌ஷமாக உள்ளது. அரசு வேலை என்பதால் நான் மாநகராட்சி துப்புரவு பணியில் சேர்ந்தேன். தொடக்கத்திலேயே மாதம் ரூ. 17,500 சம்பளம் கிடைக்கிறது. மேலும் பென்சன், ஆண்டுதோறும் சம்பள உயர்வு கிடைக்கிறது. வேலை நேரமும் குறைவு. இதனால் விரைவாக வீட்டுக்கு சென்று என் குழந்தைகளை பார்த்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நவீன்குமார் (23). டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் தனியார் நிறுவனத்தில் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டு மாநகராட்சி துப்புரவு பணியில் சேர்ந்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நான் இந்த வேலையில் சேர்ந்தேன். இதில் கிடைக்கும் சம்பளத்தை கொண்டு என் தாய் மற்றும் தங்கையை பார்த்து கொள்வேன். எனக்கு முதன் முதலாக வீடு வீடாக சென்று குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போட வேண்டும் என்று அறிவுறுத்தும் பணி வழங்கப்பட்டது.

இந்த பணியை நான் சிறப்பாக செய்து முடித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : #JOBS #GRADUATES #SWEEPERS #CORPORATION