‘மிஸ் யூ அப்பா’!.. ‘அவர் முகத்தக்கூட பாக்க முடியல’.. ‘ஒருவேளை நான் மட்டும்...!’.. நெஞ்சை ரணமாக்கிய இளைஞரின் பதிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 14, 2020 07:35 AM

கொரோனா பரிசோதனையில் இருந்ததால் இறந்த அப்பாவின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை என இளைஞர் ஒருவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Kerala youth unable to attend his father\'s funeral over coronavirus

கேரள மாநிலம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ஆபேல் ஜோசப். இவரது மகன் லினோ ஆபேல். இவர் கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் லினோவின் தந்தை ஜோசப் தூங்கிக்கொண்டிருந்தபோது கட்டிலில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த லினோ ஆபேல் உடனே கத்தாரில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவர் கொரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே அவரது தந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து லினோ ஆபேல் பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,  மிஸ் யூ அச்சா... மார்ச் 7ம் தேதி காலையில் உடனே போன் செய்யுமாறு என் சகோதரன் எனக்கு மெசேஜ் அனுப்பினான். உடனே நான் போனில் அழைத்தபோது எனது தந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்ததாக தெரிவித்தார். மோசமான நிலையில் உள்ளதால் அவரை தொடுபுழா மருத்துவமனையில் இருந்து கோட்டயம் மருத்துவமனைக்கு மாற்றுவதாக சொன்னார்கள். பின்னர் அழைத்தபோது அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.

கத்தாரில் நான் பணிபுரியும் நிறுவனத்திடம் இதுகுறித்து தெரிவித்தேன். அவர்கள் உடனே நான் ஊருக்கு செல்ல டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்கள். ஊரில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் அங்கு போக முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் நான் கத்தார் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றேன். 8ம் தேதி காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தேன். நான் கத்தாரில் இருந்து வரும்போதே மாஸ்க் அணிந்து வந்தேன். பின்னர் கோட்டயம் சென்றேன். அங்கு என் சகோதரனுக்கு போன் செய்தேன். அப்பா வெண்டிலேசனில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை.

எனக்கு லேசனா இருமல் இருந்ததால் உள்ளுக்குள் சின்ன பயம் ஏற்பட்டது. என்னால் யாருக்கும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக கோட்டயம் மருத்தவமனையில் உள்ள கொரோனா பிரிவுக்கு சென்றேன். அவர்கள் என்னை தனிவார்டுக்கு அழைத்து சென்றார்கள். அன்று இரவு 10:30 மணியளவில் என் அப்பா இறந்துவிட்டதாக சொன்னார்கள். நான் அட்மிட் ஆகியிருக்கும் அறைக்கு அடுத்த அறையில் கிடக்கும் என் அப்பாவின் முகத்தை பார்க்க அனுமதி கேட்டேன். ஆனால் பார்க்க மறுத்துவிட்டார்கள். ஜன்னல் வழியாக அப்பாவை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸை மட்டுமே பார்க்க முடிந்தது.

ஒருவேளை நான் கொரோனா பரிசோதனைக்கு வராமல் இருந்திருந்தால், என் அப்பாவின் முகத்தை பார்த்திருப்பேன். இப்போது தனி வார்ட்டில் நெகட்டிவ் ரிசல்ட் வருவதற்காக காத்திருக்கிறேன் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

News Credits: Vikatan

Tags : #KERALA #CORONAOUTBREAK #CORONAVIRUSININDIA #COVID19INDIA #COVID_19