'வாங்குன கடன் 15 லட்சம்'... 'ஆனா கையில இப்போ 60 லட்சம்'... வாரி அணைத்து கொண்ட அதிர்ஷ்ட தேவதை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅதிர்ஷ்டம் யாரை எப்போது வேண்டுமானாலும் தேடி வரலாம் என்ற கூற்று உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது கேரளாவில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கேரள மாநிலம் இருட்டி பகுதியைச் சேர்ந்தவர் சமீர். இவருக்கு சரீபா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சமீர் அந்த பகுதியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு அருகிலேயே காய்கறி கடையோடு, லாட்டரி சீட்டு விற்பனையும் ஒருவர் செய்து வருகிறார். அவரிடம் இருந்து சமீர் லாட்டரி சீட்டுகளை வாங்குவது வழக்கம். ஆனால் கடந்த 12 வருடங்களாக லாட்டரி சீட்டு வாங்கி வந்தாலும் இதுவரை சமீருக்கு எந்த பரிசும் விழுந்தது இல்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு 3 லாட்டரி சீட்டுகளை எடுத்து வைக்கும் படி கடைக்காரரிடம் சமீர் கூறியுள்ளார். அதன்படி அவரும் 3 லாட்டரி சீட்டு களை எடுத்து அதில் சமீரின் பெயரையும் எழுதி வைத்திருந்தார். இதனிடையே லாட்டரி குலுக்கல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, சமீருக்கு எடுத்துவைக்கப்பட்ட 3 லாட்டரி சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு ரூ.60 லட்சம் பரிசு கிடைத்திருந்தது. ஆனால் இது சமீருக்குத் தெரியாது.
உடனடியாக சமீரை அழைத்த அந்த கடைக்காரர் பரிசு விழுந்த விவரத்தைக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் சமீர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நான் சமீபத்தில்தான் ரூ.15 லட்சம் கடன் பெற்று வீடு கட்டினேன். அந்த கடனை எப்படி அடைக்கப் போகிறேன் எனச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் லாட்டரியில் கிடைத்த பணம் மூலம் கடனை திரும்பச் செலுத்துவேன். மேலும் எனது 3 பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைப்பேன்'' எனக் கூறினார்.