'தண்ணி மெதுவா வரும்னு பாத்தா... மதுவா வருது!'... பீதியடைந்த குடியிருப்பு வாசிகள்... திகைப்பூட்டும் சம்பவத்தின் பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடிநீர்க் குழாயில் திடீரென மது வந்ததால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியை சேர்ந்தவர், ஜோசி. அவர் இன்று காலை, தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்ப மோட்டாரை ஆன் செய்துள்ளார். சற்று நேரத்தில் பலரும் அவரிடம் வந்து தண்ணீரில் மது வாசம் வருவதாக சொல்லியுள்ளனர். ஜோஸ் குழப்பமடைந்து, தண்ணீர் குழாயை திறந்து முகர்ந்து பார்த்துள்ளார். அப்போது, மது வாசம் வருவது உறுதியாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, தண்ணீருக்கு பயன்படுத்தும் கிணற்றை சோதனை செய்து பார்த்துள்ளனர். பின்னர், கிணற்றில் இருந்து மது வாடை வந்தது உறுதியானது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார் இதற்கு கலால் துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்பதை கண்டறிந்தனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குடியிருப்பின் அருகில் இருந்த ஒரு 'பார்' சட்டவிரோதமாக நடந்து வந்ததை கண்டறிந்து அதற்கு கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது, கைப்பற்றப்பட்ட 6000 லிட்டர் மதுவை, குழி தோண்டி ஊற்றியுள்ளனர்.
அதிகாரிகள் தோண்டிய குழி, அந்த அடுக்குமாடி குடியிருப்பு கிணற்றுக்கு அருகில் இருந்துள்ளது. ஆனால், அந்த இடத்தில் சுற்றுச்சுவர் இருந்ததால் அவர்களுக்கு கிணறு இருந்தது தெரியாமல் போனது. காவல்துறை விசாரணையில் மதுவை ஊற்றியது கண்டறியப்பட்டதோடு, ஏராளமான மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. கலால் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம் என துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
