'மனமும், விடாமுயற்சியும் இருந்தால் போதும்'... 'யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த'... 'அரசுப் பேருந்து கண்டக்டர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jan 29, 2020 10:08 PM

கர்நாடகாவில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

karnataka Government Bus Conductor clears UPSC Main Exam

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மது. 29 வயதான இவர், தற்போது பெங்களூரு மாநகரப் போக்குவரத்தில், பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஜூன் மாதம் நடைப்பெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை (Prelims) தேர்வில் வெற்றிப்பெற்றார். இந்நிலையில் முதன்மை தேர்விலும் (Mains) வெற்றிப்பெற்ற மது, வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலுக்கு (Interview) தற்போது தயாராகி வருகிறார். இதில் தேர்ச்சிப் பெற்றால், நடத்துநர் பணியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக மாறிவிடுவார் மது.

மது பொதுவாக தன்னுடைய எட்டு மணி நேர பணிநேரம் போக மீதமுள்ள நேரத்தை படிப்பிற்காக செலவிட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வரை முழு முயற்சியுடன் படித்துள்ளார். அதேபோல அதிகாலை 4 மணிக்கே எழுந்து படிப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இவர் எந்த கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்லாமலே தேர்ச்சி பெற்றிருக்கிறார். மது தனது குடும்பத்தில் முதல்முறையாக பள்ளிக்கு சென்ற நபராவார். 19 வயதில் நடத்துநர் பணியில் சேர்ந்த மது, இளநிலை, முதுநிலை படிப்புகளை தொலைத்தூர கல்வி மூலம் பயின்றுள்ளார்.

முதுநிலையில் அரசியல் அறிவியல் படித்திருக்கிறார். அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற விருப்பத்தில் 2014-ஆம் ஆண்டு கர்நாடக ஆட்சிப்பணித் தேர்வு எழுதிய அவர் அதில் தோல்வியடைந்தார். இருந்தபோதும் மனம் தளராது, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரான மது, கடந்த 2018-ல் தேர்வில் தோல்வி அடைந்தார். இரண்டாவது முயற்சியாக தற்போது முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார். பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஷிகா ஐஏஎஸ், மதுவுக்கு ஊக்கம் அளித்துள்ளார். மது வெற்றிபெற அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிக்ககின்றனர்.

Tags : #CONDUCTOR #KARNATAKA