“பத்மஸ்ரீ விருது பெற்ற”.. இந்தியாவைத் திரும்பி பார்க்க வைத்த ”ஆரஞ்சு பழ விற்பனையாளர்” சாதித்தது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், மங்களூருவின் புறநகரிலுள்ள ஹரேகலாதான் ஹஜப்பாவின் சொந்த ஊர். அப்பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் ஆரஞ்சுப் பழங்களை விற்பனை செய்துவரும் இவர் கடந்த சனிக்கிழமை ரேஷன் கடையில் 35 கிலோ அரிசி வாங்குவதற்காக காத்திருந்தபோது வந்த போன் அழைப்புதான் இவரை உலகறியச் செய்தது.
ஆம். அந்த போனை அட்டென் செய்த ஹஜப்பாவுக்கு, போனில் பேசியவர்கள் இந்தியில் பேசியதால் ஒன்றுமே புரியவில்லை. பின்னர் அருகில் இருந்த ஆட்டோக்காரரிடம் போனைக் கொடுத்துள்ளார். அவர் அந்த போனில் பேசினார். அவருக்கும் பெரிதாக எதுவும் புரியவில்லை எனினும், ஹஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதாக மட்டும் கூறினார். இந்த வியப்பான உண்மையை, மாலை பத்திரிகையாளர் ஒருவர் வந்து தன்னிடம் சொல்லும்வரை ஹஜப்பா நம்பவே இல்லை. `செயின்ட் ஆஃப் ஆல்ஃபாபெட்ஸ்' என்றும் அப்பகுதியில் பரவலாக அறியப்படும் ஹஜப்பா பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளது பலருக்கும் வியப்பினையூட்டியுள்ளது.
காரணம் ஹஜப்பாவின் ஆரஞ்சு பழம்தான். ஆரஞ்சு பழ விலை என்ன? என்று தன்னிடம் கேட்ட ஒரு ஆங்கிலேயருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஹஜப்பா, எதிர்கால குழந்தைகளும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிடக் கூடாது என்று எண்ணிய ஹஜப்பா 1999-ம் ஆண்டு தம் கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில் பள்ளி ஒன்றை தொடங்கினார். அதன் பின்னர் நண்பர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் அரசு உதவிபெறும் பள்ளியாகவும், அரசுப் பள்ளியாகவும் மாற்றினார். முதலில் 28 குழந்தைகளுடன் தொடங்கிய இந்த பள்ளி தற்போது உயர்நிலைப்பள்ளியாக பல மாணவர்களுக்கு பயன் தருகிறது.
இதுபற்றி பேசிய ஹஜப்பா, கடந்த 2014-ம் ஆண்டு, காவல்துறை துணை ஆணையர் ஏ.பி.இப்ராஹிம்தான் மத்திய அரசிடம் தனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அதன்பிறகு, தான் அதை மறந்துவிட்டதாகவும், தற்போது தனக்கு விருது கிடைத்திருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் எல்லாம் கடவுள் அளிப்பவை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த தனக்கு கல்வி அளிப்பதுதான் கனவு என்றும் தனக்கு கிடைக்கும் பண விருதுகளையும் இந்த பள்ளிக்கே அளிக்கவுள்ளதாகவும் கூறும் ஹஜப்பா கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருதையும் 2013-ம் ஆண்டு பெற்றார்.
பள்ளியிலுள்ள வகுப்பறைகளுக்கு இந்தியாவின் சாதனையாளர்களான சுவாமி விவேகானந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராணி அப்பாக்கா, கல்பனா சாவ்லா ஆகியோரின் பெயர்களை வைத்துள்ள 60 வயதான ஹஜப்பா, இன்றும் ஆரஞ்சு பழங்களை விற்றுக்கொண்டு பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, மாணவர்கள் குடிக்க தண்ணீர் ஏற்பாடுசெய்வது, கல்வி வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து அதிகாரிகளிடம் பள்ளியின் வளர்ச்சிக்காக பேசுவது என்று தன் வாழ்வையே குழந்தைகளுக்காக அர்ப்பணித்துள்ளதாக அம்மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.