ஒற்றை ‘ஐடியாவால்’... கடனிலிருந்து ‘கோடீஸ்வரர்’... ‘ஒரே’ மாதத்தில் விவசாயிக்கு அடித்த ‘ஜாக்பாட்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Dec 16, 2019 03:02 PM

வெங்காய விலை உயர்வு விவசாயி ஒருவரை ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Onion Price Hike Makes Debt Ridden Karnataka Farmer Crorepati

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் தொட்டசித்தவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 2004ஆம் ஆண்டு முதல் வெங்காயம் பயிரிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு வெங்காய விலை உயரும் என முன்பே கணித்த மல்லிகார்ஜூன் தனது நிலத்துடன் மேலும் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ரூ 15 லட்சம் கடன் வாங்கி வெங்காயம் பயிரிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அறுவடைக்குப் பின்னர் ரூ 5 லட்சம் லாபம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ 10 லட்சம் வரை லாபம் கிடைக்கலாம் என மல்லிகார்ஜூன் எதிர்பார்த்திருந்துள்ளார். ஆனால் அக்டோபரில் வெங்காய விலை குறைவாகவே இருந்ததால் அறுவடை செய்யும்போது விலை வீழ்ச்சி அடைந்தால் என்ன செய்வது என்ற கவலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

பின்னர் மல்லிகார்ஜூன் கணித்ததைப் போலவே வெங்காய விலை கிடுகிடுவென உயர, அவர் 240 டன் அளவுக்கு வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்ததன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு குவிண்டால் வெங்காயத்தை ரூ 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன். அதன்பின்னர் ஒரு குவிண்டால் வெங்காயம் விலை ரூ 12 ஆயிரத்தை தொட்டதால் எனக்கு அதிக லாபம் கிடைத்தது.

எனக்கு கிடைத்த லாபத்தை வைத்து கடனை அடைத்து விட்டேன். புதிதாக வீடு ஒன்றை கட்டத் திட்டமிட்டுள்ளேன். மேலும் நிலம் வாங்கி விவசாயத்தை விரிவுபடுத்த உள்ளேன்” எனக் கூறியுள்ளார். மல்லிகார்ஜூனிடம் 50 பேர் வேலை செய்துவரும் நிலையில், தற்போதைய வெங்காய விலை உயர்வால் திருட்டைத் தடுப்பதற்காக அவரும், அவருடைய குடும்பத்தினரும் இரவு நேரங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : #KARNATAKA #MONEY #ONION #PRICEHIKE #FAMER