‘மயங்கி கிடந்த நாய்’! ‘உடைந்திருந்த கதவு’ குடும்பத்தோடு கோயிலுக்கு போய்விட்டு வந்த கோவை கான்ட்ராக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 21, 2019 08:38 PM

கோவையில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jewellery, money theft in Coimbatore contractors house

கோவை இடையார்பாளையம் அப்பாஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (59). இவரது மனைவி சசி (50). கனகராஜ் பில்டிங் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து மாலை வீடு திரும்பியபோது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த அவரது நாய் மயங்கி கிடந்துள்ளது. மேலும் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. மொத்தமாக 130 சவரன் நகை, ரூ.15 லட்சம் பணம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு டிவிஆர் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து, கொள்ளை அடித்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கோயிலுக்கு போய்விட்டு வீடு திரும்புவதற்குள் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MONEY #ROBBERY #COIMBATORE #THEFT