‘புற்றுநோய் பாதித்த’... ‘7 வயது இந்திய சிறுவனின்’... ‘நெடுநாள் ஆசையை நிறைவேற்றிய’... 'துபாய் இளவரசர்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Mar 09, 2020 12:01 PM

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 7 வயது இந்தியச் சிறுவனின் நெடுநாள் ஆசையை துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் நிறைவேற்றி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Abdullah Hussain from Hyderabad, Meets Dubai Crown Prince

இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் அப்துல்லா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன், புற்றுநோய் கட்டியினால் ஏற்பட்ட வலி, வேதனை மற்றும் ‘கீமோதெராபி’ சிகிச்சை ஆகியவற்றால் அப்துல்லாவால் பள்ளிக் கல்வியை தொடர இயலவில்லை. இதனால் வீட்டில் ஓய்வாக இருந்த வேளைகளில் ’யூடியூப்’ வலைத்தளத்தில் வீடியோக்களை பார்ப்பதில் அப்துல்லா ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். இந்த வீடியோக்களில்  துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பற்றிய சில தொகுப்புகள் அவனை வெகுவாக கவர்ந்திழுத்ததுடன், அவரை ஹீரோவாகவும் நினைக்க ஆரம்பித்தான்.

நாளடைவில், பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தானின் ரசிகராக மாறிப்போன அப்துல்லா, அவரை எப்படியாவது ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்னும் தனது பேரார்வத்தை பெற்றோரிடம் தெரிவித்திருந்தான். இதைத் தொடர்ந்து அப்துல்லா சமூக வலைதளத்தில் அவரைச் சந்திக்க விரும்புவதாகக்கூறி வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருந்தார். பின்னர், இது தொலைக்காட்சிகளிலும் செய்தியானது. இதன் மூலமாக பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் கவனத்துக்கு சென்றது.

தற்போது புற்றுநோயின் மூன்றாம் நிலை தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கும் இந்தியச் சிறுவன் அப்துல்லாவை சந்திக்க அவர் உடனடியாக விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை  பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வாழும் அரண்மனைக்கு தனது பெற்றோருடன் சென்ற அப்துல்லா அவரை ஆரத்தழுவி, அவருடன் பேசிச் சிரித்து மகிழ்ந்தான். சுமார் 15 நிமிடங்கள் நிகழ்ந்த இந்த அபூர்வ சந்திப்பின்போது  பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளிப்படுத்திய அன்பு மற்றும் அவரது எளிமையான - அடக்கமான அணுகுமுறைகள் போன்றவை தங்களை வெகுவாக வசீகரித்து விட்டதாக அப்துல்லாவின் தாயார் நவ்ஷீன் பாத்திமா பூரிப்புடன் கூறுகிறார்.

மேலும் தனது மகன் அப்துல்லா, தனது நிஜ வாழ்க்கையின் ஹீரோவை அவன் சந்தித்துள்ளான் என்று தெரிவித்தார். அப்துல்லாவை பாதித்துள்ள நோய்க்கு இனி செய்ய திட்டமிட்டுள்ள சிகிச்சை முறைகளை இளவரசர் ஷேக் ஹம்தான் அக்கறையுடன் கேட்டறிந்ததுடன் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ‘துணிச்சல் மிக்க இந்தச் சிறுவனை இன்று சந்தித்தேன்’ என்ற குறிப்புடன் தனது ‘இன்ஸ்ட்டாகிராம்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #HYDERABAD #CANCER #DUBAI #PRINCE