‘ஓடும் ஜீப்பில் தவறி விழுந்த குழந்தை’... ‘பயத்தில்'... ‘புதிய திருப்பத்துடன் வெளியான வீடியோ’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Oct 13, 2019 09:47 PM
ஓடும் ஜீப்பில் அம்மாவின் மடியிலிருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தையின் சம்பவத்தில், தற்போது புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, தங்களது ஒரு வயது குழந்தைக்கு மொட்டையடிக்க, பழனிக்கு குடும்பத்துடன் ஜீப்பில் சென்றுவிட்டு, இளம் தம்பதி தங்களது சொந்த ஊரான, கேரள மாநிலம் இடுக்கிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இரவு 9.42 மணியளவில், ராஜமாலா 5-வது மைல் வளைவில் ஜீப் திரும்பியபோது, பின்னால் இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தாயின் மடியிலிருந்து, ஜன்னல் வழியாக அந்த குழந்தை தவறி நடு சாலையில் விழுந்தது.
அடர்ந்த வனப்பகுதியில், கடும் குளிரில் அழுதுக்கொண்டே அந்த குழந்தை, சாலையை தவழ்ந்து கடந்து சென்றது. அப்போது அந்த குழந்தையை, அங்கு சோதனை சாவடியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரிகள் காப்பாற்றி, பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைத்தாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், குழந்தையை காப்பாற்றியது யார் என புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த குழந்தை தவித்தபோது, பல வாகனங்கள் கடந்து சென்றநிலையில், ஒரு ஆட்டோ ஒன்று சோதனை சாவடியில் வந்துள்ளது. அதனை நிறுத்திய இரு வனத்துறை அதிகாரிகளில் ஒருவர், ஆட்டோ ஓட்டுநரிடம், அங்கே ஏதோ ஒன்று கதறிக் கொண்டு உள்ளது என்று பயத்தில் கூறியுள்ளார். இதையடுத்து 60 வயதான ஆட்டோ ஓட்டுநரான கனகராஜ், அங்கே மற்றொரு அதிகாரியுடன் சென்றார். அப்போது அவரை வனத்துறை அதிகாரி, பேய் அங்கே இருக்கிறது போகாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துவிட்டு அலறி ஓட்டம் பிடித்தார்.
அதை காதில் வாங்காத அந்த ஆட்டோ ஓட்டுநர், துணிச்சலாக அங்கே சென்று பார்த்தபோது அது குழந்தை என்று தெரியவந்ததை அடுத்து, குழந்தையை காப்பாற்றி, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் அவர் தனது வீட்டு விலாசம் மற்றும் செல்ஃபோன் எண்ணை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். வனத்துறை அதிகாரிகள் காப்பாற்றியதாக ரகசியம் காத்துவந்த நிலையில், ஒரு மாதம் கழித்து வெளியான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் குழந்தையை காப்பாற்றியது குறித்து தற்போது விசாரணை நடைப்பெற்று வருகிறது.
