'திருடப் போன இடத்துல.. ஊஞ்சல் எதுக்கு ஆடுன?'.. 'அது வேற ஒண்ணும் இல்ல சார்'.. போலீஸிடம் திருடன் சொன்ன 'வைரல்' காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 09, 2019 11:42 AM
விழுப்புரத்தில் கடந்த மாதம் அரசுப்பள்ளி ஆசிரியர் இளங்கோ என்பவர், கொள்ளைக்காரர்களை கண்காணிக்க, சிசிடிவி நிறுவினார். ஆனால் அது தெரியாமல், அவரது வீட்டின் தரைதளத்திற்கு வந்து அவரது பைக்கில் இருந்து பெட்ரோல் திருட முயற்சித்த பெட்ரோல் திருடன், அதன் பின் மொட்டை மாடிக்கு வந்து ஏதேனும் கிடைக்குமா என்று டார்ச் லைட் அடித்து தேடிக்கொண்டிருந்தான்.

ஆனால் அதன் பின்னர், அங்கிருந்த ஊஞ்சலைக் கண்டதும் பரவசமாகிய திருடன், அதில் ஏறி அமர்ந்து இரண்டு ஆட்டம் ஆடிய பின்னர் எழுந்து சென்றான். தாமதமாக சிசிடிவி காட்சிகளில் இதைப் பார்த்த ஆசிரியர் இளங்கோ, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்தத் திருடன் விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் என்றும், இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடி விற்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் என்பதும் தெரியவந்தது. பெட்ரோல் பிடிப்பதற்கு பாட்டில் கிடைக்குமா என்று மொட்டைமாடியில் தேடியதாகவும், நாய் குறைத்த படபடப்பில் மொட்டை மாடிக்குச் சென்றதாகவும் சச்சிதானந்தம் கூறியுள்ளார்.
எனினும் திருடச் சென்ற நீ, எதற்காக ஊஞ்சல் ஆடினாய்? என போலீஸார் கேட்டதற்கு, திருடத்தான் சென்றேன். ஆனால் அங்கிருந்த ஊஞ்சலைப் பார்த்ததும் சிறு வயதில் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடிய நியாபகம் வந்ததாகவும், அதனால் ஊஞ்சல் ஆடி தன்னை ரிலாக்ஸ் செய்துகொண்டதாகவும் சச்சிதானந்தம் கூறியுள்ளார். முன்னதாக, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் வைத்து சச்சிதனாந்தம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
