தன்னை 'கடித்த' பாம்பை கையோடு 'மருத்துவமனைக்கு' எடுத்து வந்த நபர்...தெறித்து ஓடிய 'மருத்துவர்கள்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 22, 2020 06:14 PM

ராமநாதபுரம் அருகே உள்ள தொண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ramnad man takes dead snake to hospital after it bites him

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் சேது. கூலித் தொழிலாளியான இவரது வீட்டின் அருகே கட்டுவிரியன் பாம்பு ஒன்று கிடந்ததைக் கண்டு அதனை விரட்ட முயன்றுள்ளார். பாம்பு அவ்விடத்தை விட்டு நகராமல் இருக்கவே, அதை கையில் எடுக்க முயற்சித்துள்ளார். திடீரென அந்த பாம்பு சேதுவின் கைகளை சுற்றிக் கொண்டது. அவர் கைகளை உதறியும் பாம்பு தனது பிடியை விடவில்லை. சில  நொடிகளில் அந்த பாம்பு சேதுவை கொத்தியது.

வலியால் துடித்த சேதுவை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்றினர். பாம்பை அவர்கள் அடித்து கொன்றனர். இதையடுத்து, தொண்டி மருத்துவமனையில் சேதுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தன்னை கடித்த பாம்பை சேது கையுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

ராமநாதபுரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் என்ன பாம்பு கடித்தது என சேதுவிடம் கேட்டுள்ளனர்.   உடனே, தான் வைத்திருந்த பையிலிருந்து சுமார் 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் தெறித்து ஓடியுள்ளனர். சேது கொண்டு வந்த பாம்புக்கு உயிர் இல்லை என்று தெரிந்த பின்னரே, அவர்கள் நிம்மதி அடைந்தனர்.  இதையடுத்து சேதுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,  "கடித்தது என்ன பாம்பு எனத் தெரிவித்தாலே போதும். அதற்காக கடித்த பாம்பையே உடன் எடுத்து வர தேவையில்லை" என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags : #RAMANATHAPURAM #DEAD SNEAK #HOSPITAL