‘அகில உலக கலைஞர் சங்கம்’ நடத்தும்.. ‘உலக தமிழ் கலைஞர் மாநாடு..’ சென்னையில் நடைபெறும்.. ‘டீசர் வெளியீட்டு விழா..’
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Aug 21, 2019 06:26 PM
அகில உலக கலைஞர் சங்கம் நடத்தும் உலக தமிழ் கலைஞர் மாநாட்டின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.
உலகளாவிய ரீதியில் தமிழ் கலைஞர்களுக்கென்று ஒரு சங்கம் இல்லையென்ற குறையைப் போக்கும் வகையில் உருவானதுதான் அகில உலக கலைஞர் சங்கம். தமிழ் கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பது, கலைஞர்களை கௌரவித்து கலைகளை ஊக்கப்படுத்துவது, பாரம்பரிய கலைகளையும், தமிழ் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாப்பது ஆகியவையே இதன் முக்கிய நோக்கமாகும். யாழ்ப்பாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இச்சங்கம் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் கிளைகளைப் பரப்பி ஆழமாக வேர்விட்ட அமைப்பாக உருவெடுத்துள்ளது.
2020ம் ஆண்டு முதல்முறையாக அகில உலக கலைஞர் சங்கம் உலக கலைஞர் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த இருக்கிறது. தமிழ் பாரம்பரியக் கலைகளை மையப்படுத்திய ஆய்வரங்காக அமைவதே இதன் சிறப்பம்சம் ஆகும். சிறந்த ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய பேராசியர் சி.பத்மநாபன் இந்த ஆய்வரங்கிற்கு தலைமை தாங்க உள்ளார். இந்த உலக கலைஞர் மாநாட்டில் கலைஞர்கள் கௌரவிப்பு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெற உள்ளது. மாநாடு நடைபெறும் காலம், நேரம் ஆகியவை தமிழர் திருநாளாகிய தைத்திருநாளன்று மதியம் 12 மணிக்கு World1 fm வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக கலைஞர் மாநாட்டின் டீசர் வெளியீட்டு விழா வரும் ஞாயிறன்று (25.08.2019) சென்னையில் நடைபெற இருக்கிறது. கோடம்பாக்கத்தில் உள்ள பிரதாப் பிளாசா ஹோட்டலில் மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் முனைவர் மாணிக்கம், பொறியியலாளர் மகிபா தேவன், முனைவர் கிருதியா, DR.சீர்காழி சிவசிதம்பரம், முனைவர் பழனி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பிரபல நாட்டாரிசை பாடகர் புஸ்பவனம் குப்புசாமி, கவிஞர் கபிலன், பாடலாசிரியர் விவேகா ஆகியோரும் இந்த டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர்.