'சம்பாதிச்ச காசெல்லாம் குடிக்கே போச்சு'...'வேலையும் போச்சு'...சென்னை ஐ.டி ஊழியர் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Aug 17, 2019 11:03 AM
சென்னை ஐ.டி. ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர ராவ். இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி.கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். பெற்றோரை இழந்த ஈஸ்வர், சென்னையில் உள்ள தனியார் ஐ.டி.கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இவர் வாங்கும் சம்பளத்தை எல்லாம் நண்பர்களுடன் மது அருந்துவது, ஜாலியாக ஊர் சுற்றுவது என செலவழித்துள்ளார். ஒரு கட்டத்தில் வேலைக்கு கூட செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சரிவர செல்லாததால், அவரை பணியிலிருந்து ஐடி நிறுவனம் நீக்கியது. இதனால் மனவேதனையில் இருந்த ஈஸ்வர், நேற்று சோழிங்கநல்லூரில் நண்பர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார்.
ஆனால் அங்கு நண்பர்கள் யாரும் இல்லை. இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அத்தை வீட்டுக்கு இரவு தங்கச் சென்றார். ஆனால் அவரது அத்தை ஈஸ்வரை வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மிண்டும் சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற ஈஸ்வர், சிறிது நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செம்மஞ்சேரி போலீசார், தற்கொலை செய்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெற்றோரை இழந்து, வேலையையும் இழந்து, உறவினர்களும் கைவிட்டதால், குடியிருக்கக் கூட இடம் இல்லாமல் போன விரக்தியில் ஈஸ்வர் தற்கொலை கொண்டது தெரியவந்துள்ளது.
