'கெத்துன்னு நெனச்சேன்'..'ஆனா இப்ப தண்ணி கேன் போட்டு பொழைக்குறேன்'.. ஃபீல் பண்ணும் EX ரூட் தல.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Aug 13, 2019 04:23 PM
சமீபத்தில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பட்டாக்கத்தி கொண்டு ஓடவிட்டு மிரட்டிய கல்லூரி ‘ரூட்டு தல’ மாணவர்களுள் ஒருவர் பேசிய வீடியோவை சென்னை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சிலவருடங்களாக நீடித்து வந்த டூட் தல மாணவர்களின் வன்முறைப் பிரவேசங்கள் சமீபத்தில் மீண்டும் அதிகமாகின. பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த மாணவர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த காவல்துறை புதிய பல முயற்சிகளைக் கையாண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முன்னாள் ரூட்டு தல மாணவர்களின் தற்போதைய நிலையை விளக்குவதற்காக, அவர்களைத்தேடிக் கண்டுபிடித்து பேச வைத்து விடீயோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி வீடியோவில் பேசிய, பச்சையப்பன் கல்லூரியில் 2011-2014 கல்வியாண்டில் பயின்ற மாணவர் ஒருவர் மந்தைவெளி செல்லும் 41 டி பேருந்தில் 3 வருடங்கள் ரூட்டு தலையாக இருந்ததாகவும், அப்போது கெத்தாகவும் மாஸாகவும் வேற கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறினால் அடித்து உதைத்தாகவும் அதனால் கேஸ் ஆனதாகவும், அப்பா, அம்மா, டிரைவர், கண்டெக்டர் என யார் பேச்சையும் கேட்காமல் திரிந்ததாகவும் கூறுகிறார்.
ஆனால் தான் ஜெயிலில் இருக்கும்போது யாரும் தன்னை வந்து பார்க்கவில்லை என்றும், மாற்றுத்திறனாளியான தன் அப்பாவினால் தன்னை ஜாமினில் எடுக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை ஹீரோவாக சித்தரித்து, கெத்து உணர்வை ஊட்டி, தன்னுடனே இருந்த 50 பேரும் இப்போது எங்கெங்கோ ஹீரோவாக இருப்பதாகவும், தன்னை ஜீரோவாக்கிவிட்டதாகவும் பேசியுள்ளார்.
இதில் உருக்கமான விஷயம் என்னவென்றால், பின்னர் போலீஸ் தேர்வுக்காக படித்து பாஸ் ஆகியும் ரூட்டு தல வழக்குகள் இருந்ததால், தன்னால் போலீஸ் பணிக்கு போக முடியவில்லை என்றும், தற்போது தண்ணீர் கேன் போடுவதாகவும் புலம்பியுள்ளார். இதைப் பார்த்தேனும் இப்போதைய ரூட் தல மாணவர்களுக்கு பாடம் கிடைக்கட்டும் என்கிற நோக்கில் போலீஸார் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.
