‘ஊருக்குப் போன நம்மள பிரிச்சிருவாங்க’... ‘போலீஸ் வாகனத்தில் விபரீத முடிவு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Aug 12, 2019 02:05 PM
சென்னையில் போலீஸ் வாகனத்தில் கள்ளக்காதல் ஜோடி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர், புளியம்பட்டியை சேர்ந்தகுணசேகரன் என்பவரின் மனைவி 32 வயதான கவிதாமணி. இவர் அதேப் பகுதியை சேர்ந்த 42 வயதான ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதனால் இருவருக்கும் நாளைடைவில் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இதையறிந்த இருவீட்டாரும் அவர்களை கண்டித்ததால், இருவரும் சந்தித்து பேசுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் கவிதாமணி, ஜெயக்குமார் இருவரும் வீட்டை விட்டு, வெளியேறியதுடன், சென்னையில் நெற்குன்றத்தில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
மேலும் சென்னையில் உள்ள ஒரு துணி நிறுவனத்தில், இருவரும் வேலை செய்து வந்தநிலையில், இருவரும் மாயமானது குறித்து அவர்களின் வீட்டினர், நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில், இருவரும் நெற்குன்றத்தில் வசிப்பதை அறிந்த அவர்களின் உறவினர்கள், இதுபற்றி நம்பியூர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நம்பியூர் போலீசார், சனிக்கிழமையன்று இரவு நெற்குன்றம் வந்து, அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு ஜெயக்குமார் மட்டும் இருந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கவிதாமணி, ஈரோடு சென்றுவிட்டு பேருந்தில் கோயம்பேடு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கோயம்பேடு பேருந்துநிலையம் அழைத்துச்சென்ற போலீசார், பேருந்திலிருந்து இறங்கிய கவிதாமணியையும் பிடித்து, விசாரணைக்காக புளியம்பட்டிக்கு அழைத்து வர தங்கள் வாகனத்தில் ஏற்றினர். அப்போது இருவரும் தயாராக மறைத்து வைத்து இருந்த விஷத்தை, போலீஸ் வாகனத்திலேயே குடித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் உடனடியாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவிதாமணி, ஜெயக்குமார் இருவரும் உயிரிழந்தனர். இருவரும் ஊரை விட்டு வரும்போதே தங்கள் காதலை பிரித்தால், தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விஷத்தை தயாராக வைத்து இருந்துள்ளனர். போலீசாரிடம் சிக்கியதும் இருவரும் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.