உலகமே ஊரடங்கில் இருக்கும்போது... 'ஜனநாயகத் திருவிழா'வை கொண்டாடும் தென் கொரியா மக்கள்!... உலக நாடுகளை அதிரவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 15, 2020 09:15 AM

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே ஊரடங்கு நிலையில் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழலில், தென் கொரியா நாடு திட்டமிட்டபடி தேர்தலை நடத்த இருக்கும் சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

south korea conducts elections amid covid19 and lockdown

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது, ஒருவரையொருவர் தொட கூடாது கூட்டம் கூட கூடாது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம், இவை எல்லாம் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூறப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். ஆனால், இவை எல்லாம் இல்லாமல் தேர்தல் எனப்படும் ஜனநாயக திருவிழா சாத்தியமாகாது என்பதால் தான் இலங்கை, எத்தியோப்பியா, பிரான்ஸ் உள்ளிட்ட 47 நாடுகள் தேர்தலைகளை ஒத்திவைத்துள்ளன. ஆனால், கொரோனா வைரஸால் தென்கொரியா பொதுத்தேர்தலை தடுக்க முடியவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு, இங்கு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. எனவே திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா என தென்கொரியா மக்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால், வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த தென்கொரியா அரசு தேர்தலையும் நடத்துகிறது. இப்படி ஒரு பெருந்தொற்று அச்சுறுத்தலிலும் தேர்தலை நடத்துவது எப்படி என தென்கொரியாவை பார்த்து கற்று கொள்ள வேண்டும். வழக்கமான பரப்புரைகள் இங்கு நடைபெறவில்லை. வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தினர். பரப்புரைக்காக தங்களுடன் 4 பேருக்கு மேல் அழைத்து செல்லவில்லை.

வாக்காளர்களிடம் கைகுலுக்குவது தொட்டு பேசுவது கட்டி பிடிப்பது போன்ற செயல்களை தவிர்த்தனர். தென்கொரியா தேர்தல் ஆணையமும், ஒரே நாளில் வாக்குப்பதிவை நடத்தாமல், முன் கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி தந்தது. இதையொட்டி கடந்த வாரம் முதலே பொதுமக்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனால் தேர்தல் நாளில் வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

ஏற்கனவே நாட்டில் 27 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் வாக்களிக்க சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுகாதார பணியாளர்கள், கொரோனா நோயாளிகளுக்கு என தனி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உடல்வெப்பநிலை பரிசோதனை, கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்றியே தேர்தல் நடத்தப்படுகிறது.