'ஊரடங்கு' இல்லாமலேயே... 'அலறிக்கொண்டு' வீட்டுக்குள் 'ஓடும்' மக்கள்... கிராமத்தையே 'நடுங்க' செய்துள்ள 'விநோத' முயற்சி!...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 14, 2020 07:15 PM

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மக்கள் வெளியே வராமல் இருக்க இந்தோனேசிய கிராமம் ஒன்றில் சிலர் விநோதமான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

Corona Lockdown Indonesia Ghosts Try To Spook People Off Streets

கொரோனா உலகையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் சமூகப் பரவலாகி விடக் கூடாது என்பதற்காக பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனாலும் மக்கள்தொகை அதிகம் கொண்ட சில நாடுகளில் ஊரடங்கை சிலர் முறையாகக் கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் ஒருபக்கம் வந்துகொண்டே தான் உள்ளன. இந்நிலையில் இந்தோனேசியாவின் ஒரு கிராமத்தில் ஊரடங்கு இல்லாமலேயே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகின்றனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள கெபு என்னும் கிராமத்தில் சில நாட்களுக்கு முன் மர்ம உருவம் ஒன்றை அந்தப் பகுதி மக்கள் சிலர் பார்த்ததாக கூறப்படும் நிலையில், அதைப் பயன்படுத்தி கிராமத்தினர் சிலர் போலீசாருடன் இணைந்து மக்களை சமூக விலகலைக் கடைப்பிடிக்கச் செய்ய விநோதமான முயற்சியில் இறங்கியுள்ளனர். மக்கள் சில தினங்களுக்கு முன் பார்த்ததாகக் கூறிய மர்ம உருவத்தின் பொம்மைகளை தெரு முனைகளில் அவர்கள் வைத்துள்ளனர். இதையடுத்து அந்த உருவத்தை பேய் என நினைத்து கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசியுள்ள அப்பகுதி இளைஞர் மன்றத் தலைவர், "போகாங் என அழைக்கப்படும் இந்த பேய் உருவங்கள் முகத்தில் அளவுக்கு அதிகமான பவுடருடனும் பெரிய கண்களுடனும் வெள்ளைத் துணியால் மூடி அச்சமூட்டும் வகையிலான உருவத்தைக் கொண்டிருக்கும் என இங்கு நம்பப்படுகிறது. இந்த உருவம் இறந்தவர்களின் உடலைக் குறிக்கும் அமைப்பைக் கொண்டது என்பதால், மக்கள் அதைக் கண்டு பயப்படுகின்றனர். இந்த முயற்சியைத் தொடங்கியபோது எதிர்பார்த்ததை விட எதிர்மறையான விளைவுகளே கிடைத்தது. இருப்பினும் கிராம மக்களை சமூக விலகலைக் கடைப்பிடிக்க வைக்கும் விதமாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு தேவையில்லை எனக் கூறியுள்ள இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு நல்ல சுகாதாரத்தைப் பேண வேண்டும் என நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தோனேசியாவில் இதுவரை 4,241 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் 373 பேர் உயிரிழந்துள்ளனர்.