'மே' முதல்வாரத்தில் அமெரிக்கா 'முழுமையாக'... அதிகரிக்கும் 'பலி' எண்ணிக்கைக்கு இடையே... அடுத்தடுத்து 'அதிர்ச்சி' கொடுக்கும் 'ட்ரம்ப்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 14, 2020 08:38 PM

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை விரைவில் நீக்குவது தொடர்பான ஆலோசனை நடந்து வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

US Coronavirus Trump Claims Total Authority To Lift Lockdown

உலகில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக உள்ள அமெரிக்காவில் இதுவரை  5.87 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 640 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் அங்கு கொரோனாவால் 1,535 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து தொடர்ந்து 5வது நாளாக அமெரிக்காவில் சராசரியாக 1800 பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 26 ஆயிரத்து 641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை விரைவில் நீக்குவது தொடர்பான ஆலோசனை நடந்து வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போது லாக்டவுனை நீக்குவது மிகவும் ஆபத்தானது, பாதிப்பில்லாத இடங்களில் கூட படிப்படியாகவே நீக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதை கண்டுகொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளார். முன்னரே ஊரடங்கை அமல்படுத்தியிருந்தால் கொரோனாவால் அமெரிக்கா இவ்வளவு பாதிப்புகளை சந்தித்திருக்காது எனவும், மக்களின் உயிர்களைக் காட்டிலும் பொருளாதாரத்தை இயக்க வேண்டும் என்பதிலேயே அதிபர் உறுதியாக இருக்கிறார் எனவும் ட்ரம்ப் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இதுகுறித்து நிருபர்களுக்குப்  பேட்டியளித்துள்ள அதிபர் ட்ரம்ப், "வல்லுநர்கள் பலருடனும், என்னுடைய குழுவுடனும் நான் ஆலோசனை நடத்தினேன். அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள லாக்டவுனை நீக்குவதற்கான முடிவெடுப்பதில் நெருங்கிவிட்டோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். மே மாதம் முதல்வாரத்தில் அமெரிக்கா முழுமையாக திறக்கப்படும். மாகாணங்களை பாதுகாப்பாக நிர்வாகம் செய்வது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆளுநர்களுக்கு வழங்கப்படும். என்னுடைய நிர்வாகத்தின் திட்டமிடல் மக்களுக்கு நிச்சயம் நம்பிக்கையைத் தரும். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.